இறந்தே பிறந்ததாகக் கூறப்பட்ட குழந்தை...அடக்கம் செய்ய கொண்டு சென்றபோது நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம்
துருக்கியில், மருத்துவமனைக்குச் சென்ற கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு குழந்தை இறந்தே பிறந்ததாக மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், குழந்தையை அடக்கம் செய்ய கல்லறைக்கு எடுத்துச் சென்றபோது ஒரு எதிர்பாராத விடயம் நிகழ்ந்தது.
டிசம்பர் 31 அன்று, துருக்கியில் வாழும் Melek Sert (32) என்ற கர்ப்பிணிப்பெண், கடுமையான வலி மற்றும் இரத்தப்போக்கு காரணமாக Adana என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கணவனுடன் சென்றிருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஜனவரி 2 அன்று நிலைமை மோசமடையவே, அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தை இறந்தே பிறந்ததாகவும் கூறியுள்ளார்கள் மருத்துவர்கள்.
அத்துடன், அவர்கள் குழந்தைக்கு இறப்புச் சான்றிதழையும் கொடுத்து, குழந்தையின் தந்தையான Hasan Sert (34) கையில் இறந்த உடலை வைக்கும் சிறு பை ஒன்றையும் கொடுத்து அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.
தாய் ஒரு பக்கம் கதற, தந்தை கண்ணீருடன் அந்தக் குழந்தையை அடக்கம் செய்வதற்காக தனது காரில் எடுத்துச் சென்றிருக்கிறார். குழந்தைக்காக ஒரு சிறு குழி கூட கல்லறையில் தோண்டப்பட்டுவிட்டது.
ஆனால், Hasan காரில் கல்லறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென எதிர்பாராத ஒரு ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. ஆம், இறந்துபோனதாக மருத்துவர்களால் சான்றளிக்கப்பட்ட அந்தக் குழந்தை, வீறிட்டு அழத் துவங்கியுள்ளது.
உடனடியாக, மீண்டும் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் அவர்.
விடயம் என்னவென்றால், அந்தக் குழந்தை ஐந்தே மாதங்களில் பிறந்துள்ளது. அதாவது அது ஒரு குறைமாதக் குழந்தை. மருத்துவர்களோ, குழந்தை பிறந்ததாகக்கூட அல்ல, தாய்க்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக முடிவு செய்துவிட்டார்கள்.
தற்போது குழந்தை உயிருக்கு போராடிகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் குழந்தையின் தாயான Melek, தாதிகள் தன் குழந்தையை தன்னிடமிருந்து எடுத்துச் செல்லும்போது அது உயிருடன் இருந்ததை தான் உணர்ந்ததாகவும், என் குழந்தை உயிருடன் இருக்கிறதா என்று தன் கணவரைக் கேட்க, அவர் தாதிகளிடம் சென்று கேட்கும்போது, அவர்கள், குழந்தை உயிருடன் இல்லை, அது இறந்துவிட்டது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனை தரப்பு கவனக்குறைவாக செயல்பட்டதா என்பதை அறிவதற்காக, அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியிருக்கிறார்கள்.