லண்டனில் இருந்து வந்த பொருட்கள்! பிரித்தானிய பெண் கட்டிய கட்டிடத்தின் தற்போதைய நிலை... தமிழ்ப்பெண் வைத்துள்ள கோரிக்கை
லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களை வைத்து பிரித்தானிய பெண்ணால் கட்டப்பட்ட பள்ளியின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது.
ஆங்கிலேயர்களால் 1922-ம் ஆண்டு கட்டப்பட்டு நூற்றாண்டை எட்டியுள்ள சென்னை லேடி வில்லிங்டன் பள்ளியோ சிதிலமடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் பார்ப்பதற்கே பரிதாபமாய் காட்சியளிக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையின் மெரினா கடற்கரையோரங்களில் வசித்த ஏழை - எளிய மக்கள், மீனவ மக்களின் பிள்ளைகளின் கல்விக்காக திருவல்லிகேணியில் கட்டப்பட்டது தான் லேடி வில்லிங்டன் பள்ளி.
சுண்ணாம்பு மற்றும் மணல் கலந்து கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் லண்டனில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட இரும்புத் தூண்களைப் பயன்படுத்தி தரையில் இருந்து 40 அடி உயரத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பர்மா தேக்குமரக் கட்டைகளால் ஆன படிக்கட்டுகள், பலகைகள், மேசைகள் நாற்காலிகள் மற்றும் ஜன்னல் கதவுகள் ஆகியவை உள்ளன. அழகிய வேலைப்பாடுடனான கூட்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் அச்சடிக்கப்பட்ட என்சைக்ளோ பீடியா, அட்லஸ் மேப் உள்ளிட்ட மிக பழமையான தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்கள், வரலாற்று நூல்கள் போன்றவை உள்ளன.
மேலும், பள்ளியைக் கட்டிய வில்லிங்டன் சீமாட்டியின் பெயரை குறிப்பிடும் வகையில் "W" வடிவில் இந்த பள்ளி கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பள்ளியின் தனி சிறப்பு. தற்போதும் அவரின் பெயரிலேயே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாகவும் நூற்றாண்டை நெருங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இத்தகைய பல்வேறு பெருமைகளையும், வரலாற்றையும் சுமந்து நிற்கும் பள்ளி இன்று சிதிலமடைந்து அரிய நூல்களெல்லாம் செல்லரிக்கும் நிலையில் காணப்படுகிறது.
பள்ளியை மீண்டும் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க அரசோடு இணைந்து முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்களும் உதவிட வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

