சூறாவளி போல் போல் உயிரிழப்புகள் அதிகரிக்கும்... தவிர்க்கவேண்டுமானால் இதைச் செய்தாகவேண்டும்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
அமெரிக்காவில் வரும் வாரங்களில் கொரோனா உயிரிழப்புகளை தவிர்க்கவேண்டுமானால் தற்போதைய தடுப்பூசி திட்டத்தை மாற்றவேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அடுத்த 6 முதல் 14 வாரங்களில், அமெரிக்காவில் புதிய திடீர்மாற்றம் பெற்ற பிரித்தானிய, தென்னாப்பிரிக்க மற்றும் பிரேசில் வகை கொரோனா வைரஸின் தொற்று சூறாவளிபோல் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார் தொற்றுநோயியல் நிபுணரான Michael Osterholm.
அதை தவிர்க்கவேண்டுமானால், இப்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பூசி திட்டத்தில் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்யவேண்டும் என்கிறார் அவர்.
அதாவது, அமெரிக்காவில் தற்போது முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் டோஸ் போடப்பட்டு சில வாரங்களுக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டால்தான் தடுப்பூசி முழுமையாக வேலை செய்யும் என கருதப்படுவதால், இரண்டாவது டோஸுக்காக தடுப்பு மருந்து சேமித்து வைக்கப்படுகிறது.
ஆனால், கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இப்போது தடுப்பு மருந்தை இரண்டாவது டோஸுக்காக சேமித்துவைப்பதைவிட, இப்போதே அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்படவேண்டும் என்கிறார் Osterholm.
குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இப்போது இந்த முதல் டோஸ் தடுப்பூசி போடுவதன்மூலம் வரும் வாரங்களில் நிகழ இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான மரணங்களை தடுக்க இயலும் என்கிறார் அவர்.
தற்போதைக்கு அமெரிக்காவில் 8 சதவிகிதத்தினருக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசியும், 1.7 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


