குழந்தைகள் என்று கூட பார்க்காமல்... ரஷ்யப் படைவீரர்களின் கோர முகம் அம்பலம்
ஈவிரக்கமின்றி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யப் படைவீரர்களுக்கு குழந்தைகளைக் கூட விட்டு வைக்க மனமில்லை.
அவர்கள் குழந்தைகளைக் கூட குறிவைப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
ஆம், குழந்தைகள் ஆசையுடன் விளையாடும் கரடி பொம்மைகளுக்குள் (teddy bears), ரஷ்யப் படைவீரர்கள் வெடிகுண்டுகளை மறைத்துவைத்திருப்பதாக போரில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் உக்ரைன் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கள்ளங்கபடம் அறியாத குழந்தைகள், பொம்மைகள் கிடக்கிறதே என ஆசையுடன் அவற்றை எடுக்கும்போது அந்த வெடிகுண்டுகள் வெடித்துவிடும்.
Oleksandr Yatsyna, பிரித்தானியாவில் கல்வி கற்ற ஒரு சிறுநீரகத்துறை நிபுணர்.
தற்போது போரில் காயம்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அறுவை சிகிச்சைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறார்.
Kyivஇலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் Oleksandr, தான் சிகிச்சையளிக்கும் நோயாளிகளுடன் மருத்துவமனையிலேயே தங்கிவிட்டார். அவர் சாப்பிடுவது, தூங்குவது என்று எல்லாமே அந்த மருத்துவமனையில்தான்.
நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதோடு மட்டுமின்றி, அவர்களது துயரக் கதைகள் அனைத்தையும் கேட்டு அவர்களுக்கு ஆறுதலும் கூறி வரும் Oleksandr, அந்தக் கதைகள் வாழ்நாள் முழுவதும் தன்னை பாதித்துக்கொண்டே இருக்கும் என்கிறார்.
ரஷ்யப் படைவீரர்கள் குழந்தைகளைக் குறிவைப்பது ஒரு வித மனோதந்திர போர்த்திட்டம் என்று கூறும் Oleksandr, உக்ரைன் மக்களை தாங்க இயலாத அளவுக்கு வருத்தி, சோர்வடைய வைத்து, அவர்கள் எதிர்ப்பைக் கைவிட வைப்பதற்கான ரஷ்யாவின் திட்டம் அது என்கிறார்.
முதலில் வெடிகுண்டுகள் மூலம் தாக்கினார்கள், பிறகு துப்பாக்கிச்சூடு, அடுத்து சாலை முழுவதும் கண்ணி வெடிகளை பரப்பி வைத்தார்கள், இப்போது எல்லாவற்றையும் விட மோசமாக குழந்தைகளைக் குறிவைக்கும் விதத்தில் அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளுக்குள் வெடிகுண்டுகளை மறைத்துவைக்கிறார்கள் என்கிறார் Oleksandr.
அவர்கள் குடும்பங்களைக் குறிவைக்கிறார்கள் என்று கூறும் அவர், சந்தேகமேயில்லை, ரஷ்யர்கள் எங்கள் பொதுமக்களையும் ஏன் குழந்தைகளையும்கூட கொல்ல முடிவு செய்துவிட்டார்கள் என்கிறார்.
அவர்கள் தங்கள் காட்டுமிராண்டித்தனமான செயல்களால் எங்களை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள், ஆனால், எந்த அளவுக்கு அவர்கள் எங்கள் மக்களை அச்சுறுத்த முயற்சி செய்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் தைரியமானவர்களாக ஆவார்கள் என்பது ரஷ்யர்களுக்குப் புரியவில்லை என்கிறார் மருத்துவர் Oleksandr.