நாட்டைவிட்டு வெளியேற திட்டமிட்ட நான்கு பெண்கள் சடலமாக மீட்பு: அப்கானிஸ்தானில் சம்பவம்
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற திட்டமிட்டு விமான நிலையம் சென்ற நான்கு பெண்கள் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நான்கு பெண்களில் ஒருவர் மகளிர் உரிமை ஆர்வலர் எனவும் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் Mazar-i-Sharif என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே நான்கு சடலங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சனிக்கிழமை குறித்த உறுதி செய்துள்ள தாலிபான்கள், இந்த விவகாரம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாகவும், நீதிமன்ற விசாரணைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பத்திரிகைகள் வெளியிட்ட தகவலில், தொடர்புடைய நான்கு பெண்களும் விமான நிலையம் செல்லும் வழியில் ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டிருக்கலாம் எனவும், இது திட்டமிட்ட சதிச்செயல் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, கைதான இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக உள்விவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட நான்கு பெண்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கையில், நாட்டைவிட்டு வெளியேற விமானம் தயார் நிலையில் இருப்பதாகவும், விமான நிலையம் செல்ல கார் ஒன்றை அனுப்புவதாக தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதன் பின்னர் அந்த நால்வரின் சடலங்களை கண்டெடுத்துள்ளதாக தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது என்றனர். மட்டுமின்றி, சுமார் 3 வாரங்களுக்கு முன்னர் மர்ம நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாகவும்,
நாட்டைவிட்டு வெளியேற உதவலாம் என அந்த நபர் வாக்களித்ததாகவும்,
ஆனால் அந்த அழைப்பில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த குறித்த ஆர்வலர், தொடர்ந்து அந்த நபரின் அழைப்பை ஏற்கவில்லை என்றே கூறப்படுகிறது.