மகனைக் காப்பாற்ற முரட்டுக்காளை முன் பாய்ந்த தந்தை: ஒரு வைரல் வீடியோ
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே என்றொரு நெகிழவைக்கும் பாடல் உண்டு.
அந்தப் பாடலைக் கேட்கும்போது கண்ணீர் வடிக்காதவர்களே இருக்க முடியாது என்றே கூற முடியும்.
அன்புக்கு நாடு ஏது, மொழி ஏது?
அமெரிக்காவிலுள்ள Louisianaவைச் சேர்ந்த Cody Hooks (18) எருதை அடக்கும் வீர விளையாட்டு விளையாடுபவர்.
சமீபத்தில், அவர் எருது ஒன்றை அடக்கும் போட்டி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.
அப்போது அவர் அமர்ந்திருந்த எருது அவரைத் தூக்கி வீச, அவர் கீழே விழுந்துவிட்டார். அந்த முரட்டு எருதோ அவர் கீழே விழுந்த பிறகும் விடாமல் அவரைத் தாக்குவதற்காக ஓடி வந்துள்ளது.
தன் மகனுடைய விளையாட்டைக் காண்பதற்காக வந்திருந்த Codyயின் தந்தையான Landis Hooks இதைக் கவனித்துள்ளார்.
சட்டென, விநாடி நேரம் கூட யோசிக்காமல் அரங்கத்திற்குள் குதித்த Landis, தன் மகனை எருது தாக்காதவாறு தன் மகனுக்கும் எருதுக்கும் நடுவில் பாய்ந்து, தன் மகனை தன் உடலால் மறைத்துக்கொள்ள, அந்த எருது அவரை முட்டியுள்ளது.
ஒரு வேளை அந்த எருது Codyயைத் தாக்கியிருக்குமானால், அவரது குடல்கள் வெளியே சரிந்திருக்கலாம். ஆனால், அவரது தந்தை குறுக்கே விழுந்து தடுத்ததால் Cody உயிர் தப்பியுள்ளார்.
Landisக்கு காயங்கள் ஏற்பட்டாலும், அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் உயிரைக் காத்த தன் தந்தைக்கு தன் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் அந்த வீடியோவை Landisஇன் மகன் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ய, அதைக் கண்டவர்கள் மெய்சிலிர்த்துப்போயுள்ளார்கள்.
அந்த வீடியோ குறைந்த நேரத்தில் வைரலாக, தன் மகனின் உயிரைக் காக்க, தன் உயிரையும் பணயம் வைத்த Landis ஒரு ஹீரோ என மக்கள் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.