அமெரிக்காவை தாண்டி மாடர்னா தடுப்பூசியை அங்கீகரித்த முதல் நாடு!
உலகிலேயே மிக விரைவான விகிதத்தில் தனது குடிமக்களுக்கு தடுப்பூசிகளை போடத் தொடங்கிய நாடான இஸ்ரேல், அமெரிக்க மருந்து தயாரிப்பாளரான மாடர்னா உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை திங்களன்று அங்கீகரித்துள்ளது. இது மாடர்னாவின் தடுப்பு மருந்துக்கு கிடைத்த 3வது அங்கீகாரம் ஆகும்.
மாடர்னாவிடமிருந்து 6 மில்லியன் டோஸை பெறவுள்ள நிலையில், இஸ்ரேல் இந்த ஜனவரியில் அதனைப் பெற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாடர்னா நிறுவனம் அதன் COVID-19 தடுப்பூசிக்கான அங்கீகாரத்தை அமெரிக்காவிலும் கனடாவிலும் பெற்றுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியாவில் அங்கீகாரத்தை பெற பரிசீலனையில் உள்ளன.
இப்போது இஸ்ரேல் அங்கிகரித்தன் மூலம், மாடர்னா தடுப்பு மருந்து முதல் முறையாக வட அமெரிக்காவிற்கு வெளியே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி பிற்பகுதியில் அனைத்து பாதிக்கப்படக்கூடிய குடிமக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய தடுப்பூசியை டிசம்பர் 19 முதல் செலுத்த தொடங்கியது இஸ்ரேல்.
மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான விரைவான தொடக்கத்தை கடைபிடித்தால் 2021-ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் விரைவாக மீளக்கூடும் என்று இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.