கடலில் மூழ்கி உயிரிழந்த இளம்பெண்... 70 புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க முயன்றபோது நிகழ்ந்த பரிதாபம்
மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக, கடலைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் வேலியோரமாக நீந்தி வந்த இளம்பெண் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியானார்
வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் Tijuana மற்றும் San Diego ஆகிய பகுதிகளுக்கிடையே அமைக்கப்பட்டிருக்கும் வேலியோரமாக, 70 புலம்பெயர்வோர் நீந்தி வந்துள்ளனர்.
அந்த பகுதி கடுமையான நீரோட்டம் உள்ள பகுதி என்பதால் அங்கு நீந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த அபாயமான பகுதியில் நீந்தி வந்த இளம்பெண் ஒருவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். கடலில் நீந்திவந்த 70 பேரில் 13 பேரை மீட்டதாக அமெரிக்க கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.
பெயர் வெளியிடப்படாத அந்த இளம்பெண்ணைக் காப்பாற்ற அவசர உதவிக்குழுவினர் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
மற்றவர்களில் 36 பேர் எல்லை ரோந்து அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்களில் 25 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள். மீதமுள்ள 33 பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
இதேபோல், இதே இடத்தில், மார்ச் மாதம் எல்லையை நீந்திக் கடக்க முயன்ற Yuri Rios (28) என்ற இளம்பெண் கடலில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. .