அமெரிக்க துப்பாக்கிச்சூட்டின்போது துணிந்து வேலியைத் தாண்டி பள்ளிக்குள் குதித்து பிள்ளைகளை மீட்ட வீரத்தாய்
அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது, பெண் ஒருவர், தானே வேலியைத் தாண்டி பள்ளிக்குள் குதித்து, துணிச்சலாக தன் பிள்ளைகளை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்.
நேற்று முன் தினம், காலை 11.30 மணியளவில், டெக்சாசிலுள்ள Robb Elementary School என்னும் பள்ளிக்குள் நுழைந்த முன்னாள் மாணவனான Salvador Ramos (18) என்பவன், ஈவிரக்கமின்றி பிஞ்சுக்குழந்தைகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான்.
அப்போது தகவலறிந்து பள்ளிக்கு வந்த பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்குள் துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருக்க, பொலிசாரோ பள்ளிக்குள் செல்லாமல் வெளியேயே நின்று கொண்டிருந்திருக்கிறார்கள்.அவர்களை உள்ளே செல்லும்படி வற்புறுத்திய பெற்றோரை கீழே தள்ளி, அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து, டேஸர் கருவியை வைத்து அவர்களை உள்ளே விடாமல் தடுத்ததைத் தவிர உருப்படியாக பொலிசார் எதையும் செய்யவில்லை என குமுறுகிறார்கள் பெற்றோர்.
இந்நிலையில், பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் செய்தி கேட்டதும், 40 மைல் தொலைவிலிருந்து, தன் பிள்ளைகளுக்கு என்ன ஆனதோ என பதறியடித்து ஓடோடி வந்திருக்கிறார் Angeli Rose Gomez என்ற பெண்.
அவருடைய இரண்டு பிள்ளைகளும் அந்தப் பள்ளியில்தான் படித்துவந்திருக்கிறார்கள்.
ஆனால் Angeli பள்ளிக்கு வந்தபோது அங்கு நின்ற பொலிசார், தாங்களும் பள்ளிக்குள் செல்லாமல், பள்ளிக்குள் செல்ல முயன்ற பெற்றோரையும் விடாமல் நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள்.
ஏன் இப்படி சும்மா நிற்கிறீர்கள், பள்ளிக்குள் செல்லுங்கள் என அவர் சத்தமிட, பொலிசார் ஒருவர் Angeli விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி அவரைக் கைது செய்துள்ளார்.
தனக்கு தெரிந்த பொலிசார் ஒருவர் அங்கிருப்பதைக் கண்ட Angeli, அவரிடம் பேசி தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார்.
மக்கள் தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கோரி தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருக்க, மெதுவாக கூட்டத்திலிருந்து வெளியேறிய Angeli, யாரும் கவனிக்காத நேரத்தில், வேலியைத் தாண்டி பள்ளிக்குள் குதித்திருக்கிறார்.
நல்ல வேளையாக, துப்பாக்கிச்சூடு நடத்துபவன் கண்ணில் படாமல் சென்று, தன் பிள்ளைகளை மீட்டு பத்திரமாக வெளியே கொண்டு வந்திருக்கிறார் Angeli.
Angeli உட்பட பல பெற்றோர், ஒன்றும் செய்யாமல் சும்மா நின்றதுடன் கேள்வி கேட்ட தங்களையே கைது செய்ய முயன்ற பொலிசார் மீதான தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அதற்கு ஆதாரமாக வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ள நிலையில், பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.