வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு- வானிலை மையம்
அந்தமான் கடல் பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 23ஆம் திகதி புதன்கிழமை புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் கூறியதாவது..,
மத்திய அந்தமான் கடல் பகுதியில் 5.8 கி.மீ. உயரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் தாக்கத்தால் மத்திய வங்கக்கடலில் கிழக்கு பகுதி, அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23ஆம் திகதி அன்று புயல் சின்னமாக வலுப்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உருவாகும் என தெரிகிறது.
இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் பெரும்பாலான பகுதிகளிலும், 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்றும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது.
திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை அதிகமாக இருக்கும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |