கனடாவில் இளம்பெண்ணின் அறைக்குள் பொலிசார் அத்துமீறி நுழைந்த விவகாரம்... பூதாகரமாகும் பிரச்சினை
கனடாவில் வீடொன்றிற்குள் அனுமதியின்றி நுழைந்து, இளம்பெண் ஒருவரின் படுக்கையறைக்குள் பொலிசார் நுழைந்த விவகாரம் வலுத்துள்ளது.
Newfoundlandஇலுள்ள ஒரு வீட்டில் Cortney Pike என்ற பெண் தனது காதலரான Andrew Dunphyயுடன் படுத்திருக்கும்போது, அதிகாலை 5.20 மணியளவில் தங்கள் அறைக்கு வெளியில் இருந்து யாரோ அழைப்பதைக் கேட்டிருக்கிறார்.
கதவைத் திறந்தால், வீட்டுக்குள் பொலிசார் இருவர் நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள், தாங்கள் காணாமல் போனஒரு பெண்ணைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், அந்தப் பெண்ணைக் குறித்து ஏதாவது தெரியுமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அத்துடன், Cortneyயின் மகள் Nevaeh (11) தான் தூங்கிக்கொண்டிருந்ததாகவும், தன் முகத்தில் யாரோ டார்ச் அடித்ததால் தான் விழித்துக்கொண்டதாகவும், தன்னிடம் காணாமல் போன ஒரு பெண்ணைக் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் கூற, கோபமடைந்த Cortney, அவர்கள் எப்படி தங்களுடைய அனுமதி இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்தார்கள், எப்படி தன் அனுமதியில்லாமல் தூங்கிக்கொண்டிருந்த தன் மகளுடைய படுக்கையறைக்குள் நுழைந்தார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, சட்டத்தரணி ஒருவர் உதவியுடன் Cortney முறைப்படி புகார் ஒன்றையும் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அந்த பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.
இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துள்ள சட்டத்தரணிகள், பொலிசார் தங்கள் எல்லையை மீறியுள்ளதாகவும், என்ன நடந்தது என்பது குறித்து அவர்கள் விளக்கமளிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்.
Ottawaவைச் சேர்ந்த சட்டத்தரணியான Michael Spratt, ஒருவர் பயங்கர ஆபத்திலிருக்கும்போது, தீவிரமாக குற்றவாளி ஒருவரைத் துரத்திக்கொண்டிருப்பது போன்ற ஒரு சூழ்நிலை இருந்தாலன்றி, தேடுதல் அல்லது கைது வாரண்ட் இல்லாமல் ஒரு வீட்டுக்குள் பொலிசார் நுழையக்கூடாது. இந்த விடயத்தில் அப்படி ஒரு சூழ்நிலை இருந்ததாகத் தெரியவில்லை.
அப்படிப் பார்த்தால், இந்த விடயத்தில் பொலிசார் சட்டத்தைத் தாங்களே கைகளில் எடுத்துக்கொண்டு அரசியல் சாசன கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டிருக்கிறார்கள் என்கிறார்.
மேலும், பிராம்ப்டனைச் சேர்ந்த சட்டத்தரணியான Michelle Johal, இந்த விடயம் கையாளப்பட்டுள்ள விதம் பல கேள்விகளை எழுப்புகிறது என்கிறார்.
ஆக, பொலிசார் வீட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த விவகாரத்தை சட்டத்தரணிகள் கையில் எடுத்துக்கொண்டு கேள்விகள் எழுப்பியுள்ளதைப் பார்க்கும்போது, பிரச்சினை பெரிதாகும் என்றே தோன்றுகிறது...