திடீரென்று தற்கொலை செய்து கொண்ட புது மணப்பெண்: பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி: பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் மென்பொறியாளரான இளம் பெண் திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி பகுதியை சேர்ந்தவர்கள் பிந்து(25) மற்றும் பானு சாய் தம்பதி.
மென் பொறியாளர்களான இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் திருமணம் முடிந்துள்ளது. பிந்து பெங்களூருவிலும், பானு சாய் ஐதராபாத் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு என்பதால் குடியிருப்பில் இருந்தபடியே பணியாற்ற மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை அனுமதித்துள்ள நிலையில், பானு சாய் மற்றும் பிந்து தம்பதி ஒன்றாக முடிவு செய்து, பெங்களூருவில் தங்கி, தங்கள் பணியை தொடர திட்டமிட்டனர்.
இந்த நிலையிலேயே பிந்து செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடந்தார் என்ற தகவல் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
தகவல் அறிந்த பொலிசார், சம்பவயிடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றியதுடன், முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில், பானு சாயின் பெற்றோர்கள் அளித்த நெருக்கடியே பிந்து தற்கொலை செய்ய காரணம் என தெரிய வந்துள்ளது.
பெங்களூருவில் குடியிருப்பு ஒன்றை குத்தகைக்கு எடுக்கவும், அதற்கு தேவையான பணத்தை பிந்துவின் பெற்றோரிடம் இருந்து திரட்ட பானு சாயின் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவர்கள் கட்டாயப்படுத்தவே, பிந்து திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தங்களது மகளை பானு சாயின் குடும்பத்தினர் அடித்தே கொன்றதாக பிந்துவின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருமணத்தின் போது பணம் கடன் வாங்கியே, பானு சாய் குடும்பத்தினர் கேட்டதாக 200 கிராம் அளவுக்கு தங்கம் அளித்ததாகவும், தற்போது மேலும் பணம் கேட்டு தொல்லை அளித்து வந்ததாகவும், பிந்துவை அடித்து துன்புறுத்தி பின்னர் அவர்கள் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள திருப்பதி பொலிசார், மேலதிக விசாரணைக்கு பின்னரே, உண்மை காரணம் தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.