கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை ஒரே நேரத்தில் செலுத்திய நர்ஸ்
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் போன் பேசிய மும்முரத்தில் பெண் ஒருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை நர்சு ஒருவர் செலுத்தியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் கான்பூர் தெஹாத் மாவட்டத்தில் அக்பர்பூர் பகுதியில் அமைந்த அரசின் முதன்மை சுகாதார மையம் ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்காக 50 வயதான கமலேஷ் குமாரி என்ற பெண் சென்றுள்ளார்.
அவருக்கு முதலில் ஒரு டோசுக்கான தடுப்பூசியை போட்டு விட்டு சில வாரங்கள் கழித்து அடுத்த டோஸ் செலுத்தப்பட வேண்டும்.
ஆனால், போன் பேசியபடி அலட்சியமுடன் செயல்பட்ட சுகாதார மைய நர்ஸ் கவன குறைவாக 2 தடுப்பூசிகளுக்கான மருந்தை ஒரே நேரத்தில் போட்டு உள்ளார்.
இதுபற்றி அந்த பெண் நர்சிடம் கேட்டுள்ளார். அதற்கு மன்னிப்பு கோருவதற்கு பதிலாக அவரிடம் நர்ஸ் சண்டை போட்டுள்ளார்.
இதனையறிந்த பெண்ணின் உறவினர்கள் அமளியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
2 தடுப்பூசிக்கான மருந்து செலுத்தப்பட்டதில் பெண்ணின் கையில் லேசான வீக்கம் ஏற்பட்டு உள்ளது.
எனினும் வேறு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து முதன்மை சுகாதார மையத்தின் மூத்த மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளும்படி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.