மதுரையில் வைத்து குஷ்புவை கைது செய்த பொலிஸார்
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
குஷ்பு கைது
பாஜக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் பேரணி நடத்தி வருகின்றனர். அப்போது, பேரணியில் கலந்துகொள்ள பாஜக பிரமுகர் குஷ்பு வந்திருந்தார்.
குஷ்பு பேசுகையில், "இந்த பேரணிக்கு திமுக அனுமதி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. திமுக ஆட்சிக்கு எதிராக யார் போராட்டம், பேரணி நடத்தினாலும் எங்களுக்கு அனுமதி கொடுப்பதே இல்லை.
அதற்கு காரணம் என்னவென்றால் நாங்கள் உண்மையை பேசுவோம் என்று திமுகவுக்கு தெரியும். அதனால் தான் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.
கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை மக்கள் கேட்பதற்கு தயாராக இருக்கிறார்கள்" என்றார்.
இதையடுத்து, தடையை மீறி தொடர்ந்து பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |