அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.., குவியும் திமுக தொண்டர்கள்
தமிழக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை சோதனை
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான அமைச்சர் துரைமுருகன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
காட்பாடி காந்தி நகரில் இருக்கும் அவரது வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மொத்தமாக அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சுமார் 50க்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "வீட்டில் யாரும் இல்லை. யார் வந்திருக்கிறார்கள் என்ற தகவலும் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்த அளவு தான் எனக்கும் தெரியும். விவரம் தெரிந்தவுடன் கருத்து கூறுகிறேன்" என்றார்.
இதனிடையே, துரைமுருகன் ஆதரவாளரான காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
முன்னதாக 2019 மக்களவை தேர்தலின் போது மக்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக பூஞ்சோலை சீனிவாசன் சிமெண்ட் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடியை வருமானத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான வழக்கு தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
இதனால், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |