இந்த நகரில் இறப்பது சட்டவிரோதமானது: பின்னணியில் உள்ள விசித்திரமான கதை
ஸ்பெயினின் கிரனாடா மாகாணத்தில் அமைந்துள்ள லான்ஜரோன் (Lanjaron) என்ற சிறிய நகரத்தில் இறப்பது "சட்டவிரோதமானது" என்ற விசித்திரமான ஒரு சட்டம் உள்ளது.
ஸ்பெயினின் "இறக்கத் தடை” செய்யப்பட்ட நகரம்
1999-ல் அப்போதைய மேயர் ஜோஸ் ரூபியோவால் பிறப்பிக்கப்பட்ட இந்த விசித்திரமான சட்டம், நகரத்தின் கல்லறை நிரம்பிவிட்டதால், புதிய கல்லறைகளுக்கு இடமில்லாமல் போன ஒரு தீவிர பிரச்சினைக்கு, நகைச்சுவையான தீர்வாக அமைந்தது.
புதிய கல்லறைக்கான நிலம் கிடைக்கும் வரை, லான்ஜரோன் நகரவாசிகள் "இறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறார்கள்" என்று மேயர் ரூபியோ அப்போது அறிவித்துள்ளார்.
மேலும் அதிகாரிகளால் இதற்கு தீர்வு காணும் வரை, மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு "முன்னுரிமை" அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த, மேயரின் இந்த நகைச்சுவையான அணுகுமுறை அமைந்துள்ளது.
மேயரின் இந்த நகைச்சுவை உள்ளூர் மக்களிடையே பரவலாக எதிரொலித்தது. ஆனால், 26 ஆண்டுகள் கடந்த பிறகும், அந்த நகரில் ஒரே ஒரு கல்லறையே உள்ளது.
நார்வேயின் "இறக்கத் தடை” செய்யப்பட்ட நகரம்
இப்படிப்பட்ட விசித்திரமான தடை உள்ள ஒரே இடம் இதுவல்ல. நார்வேயில் உள்ள லாங்யர்பியென் (Longyearbyen) என்ற இடத்திலும், 1950-ஆம் ஆண்டு முதல் இதேபோன்ற ஒரு தடை உள்ளது.
துணை ஆர்க்டிக் காலநிலை நிலவுவதால், அங்கு புதைக்கப்பட்ட உடல்கள் சிதைவடையாமல் இருப்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள், புதைக்கப்பட்ட உடல்களிலிருந்து 1917-ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சா வைரஸின் உயிருள்ள மாதிரிகளை மீட்டெடுத்தனர். நோய் பரவும் அபாயம் காரணமாக, புதிய கல்லறைகளுக்கு அந்த இடம் மூடப்பட்டது.
தடைகளுக்கு அப்பால் அழகான நகரம்
இறப்பதற்கு தடை என்ற விதியைத் தாண்டி, லான்ஜரோன் ஒரு அழகான நகரம். இங்கு சுமார் 4,000 பேர் வசிக்கின்றனர்.
"அல்புஜர்ராக்களின் நுழைவாயில்" என்று அழைக்கப்படும் இந்நகரம், சியரா நெவாடா மலைகளின் அடிவாரத்தில், கிரனாடாவில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்நகரம், கனிம வளம் நிறைந்த நீரூற்றுகளுக்குப் பிரபலமானது. பல நூற்றாண்டுகளாக அதன் நீரூற்றுகள் குணப்படுத்தும் பண்புகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
18-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த நகரின் ஸ்பா, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
பாரம்பரிய நீர் மற்றும் ஹாம் திருவிழா
லான்ஜரோன், அதன் துடிப்பான திருவிழாக்களுக்கும் பெயர் பெற்றது. இதில் மிகவும் பிரபலமானது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24-ஆம் தேதி கொண்டாடப்படும் ஃபியஸ்டா டெல் அகுவா ஒய் டெல் ஜமோன் (நீர் மற்றும் ஹாம் திருவிழா). இந்த விழாவில், நகரவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி, நகரின் நீராதார பாரம்பரியத்தை கொண்டாடுகின்றனர்.
இந்த நகரின் பொருளாதாரம், நீர் தொழில், விவசாயம் மற்றும் சுற்றுலாவைச் சார்ந்துள்ளது. இந்நகரத்தில் பாதாம், ஆலிவ் மற்றும் திராட்சை போன்றவை விளைவிக்கப்படுகின்றன.
சொர்க்கத்தை காட்டிய டிக்-டாக்
இங்கு தயாரிக்கப்படும் உள்ளூர் ஒயின்கள் மற்றும் ஹாம், இப்பகுதியின் சிறப்பு உணவுகளாகக் கருதப்படுகின்றன. அண்மைக் காலமாக, பார்சிலோனா மற்றும் மேஜர்க்கா போன்ற அதிக மக்கள் கூட்டம் நிறைந்த சுற்றுலாத் தலங்களுக்கு மாற்றாக, லான்ஜரோன் நகருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை டிக்-டாக் மூலம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |