கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட இது தான் காரணமாம்! பயங்கரமான பிளான இருக்கே
தமிழக சட்டசபை தேர்தலில், ஆண்டிப்பட்டி தொகுதியை விட்டுவிட்டு, கோவில்பட்டி தொகுதியை தினகரன் தெரிவு செய்தது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும், தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டிடுவதாக அறிவிக்கப்பட்டது.
தேனி அல்லது ஆண்டிப்பட்டியில் தான் தினகரன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் டிடிவி திடீரென்று கோவில்பட்டியில் போட்டிட முடிவு செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கோவில்பட்டியில் தொகுதி சீரமைப்பில் நாயக்கர் சமுதாய ஓட்டுக்கள் குறைந்து, தேவர் சமுதாய ஓட்டுக்கள் தான் இந்த முறை வெற்றி வாய்ப்பை நிர்ணயம் செய்யவுள்ளதாம்.
தேவர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ள கயத்தாறு ஒன்றியம் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள், முன்பு ஓட்டப்பிடாரம் தொகுதியில் இருந்தது.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் தொகுதியை ரத்து செய்து அதிலிருந்த பகுதிகளை ஓட்டப்பிடாரம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சேர்த்ததால், ஓட்டப்பிடாரம் தொகுதியில் இருந்த கயத்தாறு ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகள் கோவில்பட்டி தொகுதியில் சேர்ந்து விட்டன.
இதனால் நாயக்கர்கள் பெரும்பான்மையாக இருந்த கோவில்பட்டி தொகுதி தற்போது தேவர் சமுதாயத்தின பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியாக மாறிவிட்டது.
மேலும், ஆண்டிபட்டியில் போட்டியிடுவேன் என்று கூறிய டிடிவி தினகரன், அங்கு ஓபிஎஸ், தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுவதால், இவர்களுக்கு மத்தியில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது கடினம் என்பதாலும், கோவில்பட்டி தொகுதி சிறிய தொகுதி என்பதால் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வசதியாக இருக்கும் என்பதாலும் டிடிவி இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.