போரில் உக்ரைன் விவசாயிகளின் பங்களிப்பு: வைரலாகியுள்ள காட்சிகள்
ஐரோப்பாவிலேயே ஐந்தாவது பெரிய இராணுவத்தினர் உக்ரைன் விவசாயிகள்தான் என இணையத்தில் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறதாம்.
அதற்குக் காரணம் வைரலாகியுள்ள சில காட்சிகள்...
ஆம், ரஷ்ய படைவீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்ட இராணுவ வாகனங்கள், டாங்குகள் முதலானவற்றை கைப்பற்றப்பட்ட இடத்திலிருந்து வேறிடத்துக்கு அகற்ற உக்ரைன் விவசாயிகள் உதவிவருகிறார்களாம்.
மேலும், சகதியில் சிக்கி நிற்கும் டாங்குகள் முதலான வாகனங்களை அகற்றவும் விவசாயிகள் தங்கள் ட்ராக்டர்களைப் பயன்படுத்தி உதவிவருகிறார்களாம்.
இதற்கிடையில், உக்ரைன் அரசு விவசாயிகளிடம் வேறொரு பெரிய உதவியை கோரியுள்ளதாம்.
அது என்னவென்றால், ஏப்ரல் 1ஆம் திகதி, வசந்த காலத்தில் விதை விதைக்கும் காலம். ஆகவே, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, விவசாயிகளையும், உணவு உற்பத்தி செய்வோரையும், இரு மடங்கு முயற்சி எடுத்து, விவசாயம் செய்ய வாய்ப்புள்ள நிலப்பகுதி முழுவதும் எப்படியாவது கடைசி விதை வரை விதைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளாராம்.
ஏனென்றால், ரஷ்யா போர் தொடுத்துள்ளதைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் பெரும்பகுதி போர்க்களமாகிவிட்டதால், விவசாயம் செய்யும் இடங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிலைமை இப்படியே தொடர்ந்தால், எங்களால் 30 முதல் 50 சதவிகிதம் வரையிலான விவசாய நிலத்தில்தான் பாதுகாப்பாக விவசாயம் செய்ய இயலும் என்கிறார் உக்ரைன் வர்த்தக அலுவலக ஊழியரான Nazar Bobitski என்பவர்.
கவலையை ஏற்படுத்தியுள்ள இன்னொரு விடயம் என்னெவென்றால், ரஷ்ய படைகள், வேண்டுமென்றே விவசாய நிலங்களையும், விவசாயப் பொருட்களையும் நாசம் செய்து வருகின்றனவாம்.
ஒரு பக்கம், குண்டுகள் போடுவதும், ஏவுகணைகள் வீசுவதுமாக தாக்குதல்களைத் தொடரும் ரஷ்ய வீரர்கள், வான்வழியாக விவசாய நிலங்களில் கண்ணிவெடிகளையும் வீசி வருவதால், விவசாயிகள் விவசாயம் செய்வதும் போருக்குச் சமமான விடயமாக ஆகியுள்ளது என்கிறது உக்ரைன் அரசு!