உலக அரசியலை கையில் வைத்திருக்கும் குட்டிநாடு! வத்திக்கானின் வரலாறு, சுவாரஸ்ய தகவல்கள்
ஐரோப்பாவில் உள்ள உலகின் மிகச்சிறிய நாடான வத்திக்கான் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கே காண்போம்.
உலகின் சிறிய நாடு வத்திகானில் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் காலமானார்.
அவரது மறைவு உலகெங்கும் உள்ள கத்தோலிக்கக் கிறித்துவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
குட்டிநாடு
உலகின் மிகச்சிறிய நாடாக உள்ள வத்திக்கான், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையிடமாகக் கருதப்படுகிறது.
வத்திகானில் போப் ஆண்டவர், கார்டினல்கள், கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள், தூதர்கள் உட்பட சுமார் 900 பேர் வசிக்கின்றனர்.
வத்திக்கான் 109 ஏக்கர் பரப்பளவை மட்டுமே கொண்டது. இது நேரடியாக போப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆட்சி செய்யும் அரசை ஹோலி சீ என குறிப்பிடுவார்கள்.
இது சர்வதேச சட்டத்தின் கீழ், ஒரு இறையாண்மை கொண்ட நீதித்துறை அமைப்பாகும். அங்குள்ள திருச்சபையை ரோமன் கியூரியா என்பது நிர்வகிக்கிறது. இது வத்திகான் செயலாளர், 16 அமைச்சகங்கள், ஆறு நிதி நிறுவனங்கள் மற்றும் பல கல்விக்கூடங்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
சுவிஸ் காவலர்கள் வத்திகானின் வாயில்களில் காவல் காக்கின்றனர். அவர்களுடன் சேர்த்து வத்திகான் காவல்படையும், பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குட்டி நாட்டின் மையப்பகுதியில் வசித்து வந்த போப் பிரான்சிஸ், உலகெங்கும் உள்ள 140 கோடி கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைவராகவும், வத்திகானின் தலைவராகவும் இருந்தார்.
வரலாறு
ஒரு காலத்தில் இத்தாலி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய பகுதியாக வத்திகான் இருந்துள்ளது. அப்போது போப் ரோமில் வசித்து வந்தார்.
ஆனால், 1870களில் இத்தாலி ஆட்சியாளர்கள் போப் பகுதிகளைக் கைப்பற்றினர். பின்னர் ஜெனரல் ரஃபேல் கடோர்னா தலைமையிலான இத்தாலிய படைகள், இந்தப் பகுதிகளைக் கைப்பற்றி தங்கள் ஆட்சியில் இணைத்தனர்.
இத்தாலியின் தலைநகராக ரோம் மாற்றப்பட்டபோது, அப்போதிருந்த போப் பியாஸ் IX வத்திகான் நகருக்கு சென்றார். அதன் பின் இத்தாலி அரசை விமர்சிக்கும் வகையில் வத்திகானில் வசிக்கும் கைதி என அவர் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, போப் இருக்கும் பகுதியைத் தனி நாடாக அறிவிக்க இத்தாலி தயங்கியது. இறுதியாக 1929ஆம் ஆண்டில் போப் பியாஸ் XI காலத்தில் ஒப்பந்தம் இறுதியானது.
அதன்படி, போப் வசிக்கும் சிறிய பகுதியை தனி நாடாகவும், அதன் சுயாட்சி உரிமையையும் தர முசோலினி ஒப்புக்கொள்ள, இத்தாலி அந்த குறிப்பிட்ட பகுதியில் போப்பின் இறையாண்மையை அங்கீகரித்தது.
சட்டம்
வத்திகானில் உள்ள சட்ட அமைப்பு என்பது இத்தாலியில் இருக்கும் சட்ட அமைப்பைப் போன்றது. சட்டத்தை மீறுபவர்கள் வத்திகானில் உள்ள சிறிய நீதின்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். அது குறித்த தகவல்களை வத்திகான் அரசு ஊடகம் வெளியிடும்.
மொத்தம் 30 மொழிகளில் அரசு ஊடகம் செய்திகளை வெளியிடுகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வருமான வரி எதுவும் இல்லை. மேலும் வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவசேவை கிடைக்கும்.
தொழிற்சங்கங்களை ஊழியர்கள் உருவாக்கவோ, சேரவோ முடியாது. வத்திகான் மக்களுக்காக இங்கு ஒரு சிறிய பல்பொருள் அங்காடி, தபால் அலுவலகம் மற்றும் மருந்தகம் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |