உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலையில் பயங்கர கிருமிகள்... தொழிற்சாலை மூடல்
உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலையில், சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சுவிஸ் நிறுவனமான Barry Callebaut நடத்தும் அந்த தொழிற்சாலை, பெல்ஜியம் நாட்டிலுள்ள Weize நகரில் அமைந்துள்ளது.
நெஸ்ட்லே, ஹெர்ஷே, Mondelez மற்றும் Unilever முதலான பல சாக்லேட் நிறுவனங்களுக்கு அந்த தொழிற்சாலையிலிருந்துதான் சாக்லேட் விநியோகிக்கப்படுகிறது என்பதால், மக்களுக்கு சாக்லேட் தட்டுப்பாடு ஏற்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
திங்கட்கிழமையன்று, Barry Callebaut தொழிற்சாலையில், சாக்லேட்டுகளை சோதனைக்குட்படுத்தும்போது, அவற்றில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சாக்லேட் தயாரிப்பு நிறுத்தப்பட்டதுடன், தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது.
தங்களிடம் சாக்லேட் வாங்கும் நிறுவனங்களுக்கு இது குறித்து தகவலளிக்கப்பட்டுள்ளதாக அந்த தொழிற்சாலையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சாக்லேட் கடைகளை சென்றடைந்திருக்க வாய்ப்பில்லை என்றபோதும், தங்கள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்பதால் , சாக்லேட்டுகளில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடியாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவலளிக்கப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், Kinder நிறுவனம் தனது சாக்லேட்டுகள் சிலவற்றில் இதே சால்மோனெல்லா கிருமிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவற்றை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.