வெறுங்கையுடன் கரடியுடன் போராடிய இளம்பெண்... உயிர் தப்பியது அதிர்ஷ்டம் என்கிறார் வனத்துறை நிபுணர்
அமெரிக்காவில், வெறுங்கையுடன் கரடியுடன் போராடிய இளம்பெண் ஒருவர் திடீரென பிரபலமாகியுள்ள நிலையில், அவர் உயிர் தப்பியது அதிர்ஷ்டம் என்கிறார் நிபுணர் ஒருவர்.
கலிபோர்னியாவில் உள்ள ஒரு வீட்டின் மதில் சுவரில் கரடி ஒன்று ஏறியதைக் கண்ட அந்த வீட்டு நாய்கள், அதைத் துரத்துவதற்காக அதைப் பார்த்து குரைத்துள்ளன.
ஆனால், அந்த கரடி அங்கிருந்து அசைவதாக தெரியவில்லை. அப்போது, நாய்கள் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து Hailey Morinico (17) என்ற இளம்பெண் வெளியே வந்திருக்கிறார்.
அந்த கரடி தன் நாய்களைத் தாக்க முயல்வதைக் கண்ட Hailey, சற்றும் யோசிக்காமல் ஓடிச் சென்று அந்த கரடியைப் பிடித்து தள்ளிவிட்டிருக்கிறார். அந்த கரடி தடுமாறி விழ, அதற்குள் தன் நாய்களைக் காப்பாற்றி வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் Hailey. இந்த சம்பவத்துக்குப் பிறகு Hailey பிரபலமாகிவிட, தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் அவர்.
அந்த பேட்டியில், அந்த கரடியைத் தள்ளிவிடும் வரை, அது ஒரு கரடி என்பதையே நான் உணரவில்லை என்கிறார் அவர். என் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை என்று கூறும் Hailey, நல்ல மன நிலைமையில் இருக்கும் யாராவது ஒரு கரடியைப் பிடித்துத் தள்ளி விடுவார்களா என்கிறார் அசடு வழிய சிரித்துக்கொண்டே... இந்நிலையில், வனத்துறை நிபுணரான Ron Magill கூறும்போது, குட்டியுடன் இருக்கும் ஒரு கரடியைவிட ஆபத்தான ஒரு விடயம் இருக்க முடியாது என்கிறார்.
Hailey கரடியிடமிருந்து உயிர் தப்பியது அதிர்ஷ்டமே என்று கூறும் அவர், எந்த வன விலங்கையும் நோக்கி ஓடவும் கூடாது, தொடவும் கூடாது, அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்.