ஹிட்லரை, நெப்போலியனை தோற்கடித்தவர்கள்... ரஷ்யாவை விட்டுக்கொடுக்காத டொனால்டு ட்ரம்ப்
ஐரோப்பிய தலைவர் அவசர கூட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக தகவல் வெளியான நிலையில், உக்ரைனில் சண்டையை நிறுத்த விளாடிமிர் புடின் விரும்புவதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் எதிர்காலம்
ரஷ்ய ஆதரவு நிலையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து முன்னெடுக்கும் நிலையில், உக்ரைனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து விவாதிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் திங்களன்று பாரிஸ் நகரில் சந்திக்க உள்ளனர்.
இந்த அவசர சந்திப்பில் உக்ரைனின் எதிர்காலம் தொடர்பில் விரிவாக மீண்டும் விவாதிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி எதிர்பார்க்கிறார். மட்டுமின்றி, உக்ரைன் போர் தொடர்பில் விவாதிக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் சவுதி அரேபியாவில் சந்திக்க இருக்கும் நிலையிலேயே பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானிய தலைவர்கள் பாரிஸில் அவசர சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்படும் சந்திப்பிற்கு ஐரோப்பா தலைவர்களுக்கு அழைப்பில்லை என்ற நிலையில், உக்ரைன் தரப்பில் கலந்துகொள்வார்களா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் புளோரிடாவில் NASCAR விழா ஒன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி என்ன நினைக்கிறார் என்பதை குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் சண்டையை நிறுத்த புடின் விரும்புகிறார் என தாம் நினைப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
துருப்புகளை களமிறக்க
ரஷ்யா மிகப்பெரிய இராணுவ கட்டமைப்பைக் கொண்டது, அவர்கள் ஹிட்லரையும் நெப்போலியனையும் தோற்கடித்தவர்கள் என குறிப்பிட்ட ட்ரம்ப், நீண்ட காலமாக அவர்கள் போரிட்டு வருகிறார்கள் என்றார்.
இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்றால் உக்ரைனில் அமைதி காக்கும் இராணுவம் தொடர்பில் பிரித்தானிய துருப்புகளை களமிறக்க தாம் தயார் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2030 வரை ஆண்டுக்கு 3 பில்லியன் பவுண்டுகள் செலுத்துவதன் மூலம் உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் தற்காப்பில் முக்கிய பங்கை வகிக்க பிரித்தானியா தயாராக உள்ளது என்றார். பாரிஸ் மாநாட்டில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா, நேட்டோ தலைவர் மார்க் ரூட் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |