ஆசிய நாட்டவரான மாணவியை குளியலறைக்குள் அடைத்த திருடர்கள்... பின்னர் நடந்த அராஜக செயல்கள்
அமெரிக்காவில், தன் உறவினர் வீட்டுக்கு ஒன்லைனில் கல்வி கற்பதற்காக சென்ற ஒரு மாணவியை திருடர்கள் குளியலறைக்குள் அடைத்துவிட்டு, வீட்டை சூறையாடி சென்ற சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இணையம் வாயிலாக அந்த மாணவி வகுப்பில் இணைந்திருந்தபோது, இரண்டு திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.
அந்த மாணவியை சட்டையைப் பிடித்துத் தூக்கி குளியலறைக்குள் விட்டு கதவை மூடியிருக்கிறார்கள் அவர்கள்.
அந்த வீட்டிலிருந்த தலையணை உறைகளை கழற்றி, அவற்றில் பணம், விலையுயர்ந்த கமெரா ஆகியவற்றை நிரப்பிக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள் அந்த திருடர்கள்.
இதற்கிடையில், வெளியே நடப்பதை அறியாமல் திக் திக் என்று திகிலில் உறைந்திருந்த அந்த மாணவி, ஒரு வேளை தான் கடத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்று பயந்து, அப்படி நடந்தால் துப்புக் கொடுக்கும் வகையில், அந்த குளியலறையின் கதவில் தன் பெயரை எழுதி, ’உதவி, திருடர்கள்’ என்று எழுதிவைத்துள்ளாள்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த மாணவியை ஒன்றும் செய்யாமல் விட்டுச் சென்றுவிட்டார்கள் அந்த திருடர்கள்.
அத்துடன் அந்த வீட்டி உரிமையாளரின் காரையும் நாசம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள் அவர்கள்.
ஏற்கனவே அமெரிக்காவில் சமீப காலமாக ஆசியர்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருவதால், ஒருவேளை இது ஆசியர்கள் மீதான இனவெறித்தாக்குதலாக இருக்குமோ என பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.


