அப்பாவை பற்றி பேசும் முன் இதை யோசித்து பேசுங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ட்வீட்
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியை வைத்து மலிவான அரசியல் செய்து வருகிறார்கள் என அவருடைய மகள் கதீஜா ரஹ்மான் கூறியுள்ளார்.
'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி
சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் (செப்.10) நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பார்வையாளர்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல், பார்க்கிங்கிற்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். சிலர், நெரிசல் காரணமாக திரும்பிச் சென்றுள்ளனர்.
அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்த காரணத்தினால் தான், ரூ.1000 டிக்கெட் வாங்கியவர்கள் வேறொரு இருக்கைக்கு சென்றது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், மோசமான ஆடியோ சிஸ்டம் மூலம் பாடலை சரியாக கேட்கமுடியவில்லை எனவும், விஐபிக்களுக்கு மட்டும் நல்ல கவனிப்பு இருந்தது எனவும் ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆர்.ரஹ்மான் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து பதிவிட்டு வந்தனர்.
கதீஜா ரஹ்மான் ட்வீட்
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மூலம் ஊழல் செய்ததை போல சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
சிலர் இந்த விவகாரத்தை வைத்து மலிவான அரசியல் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் அனைத்திற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் 100 சதவீதம் காரணம். இருந்தாலும் ஏ.ஆர்.ரகுமான் அதற்காக முழு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் 'நெஞ்சே எழு' என்ற இசை நிகழ்ச்சி நடத்தியவர்.
கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2018 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் உதவியவர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவியவர்.
திரைத்துறையில் ஏழ்மை நிலையில் உள்ள லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தியவர். ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து அவதூறாக பேசும் முன் இதை யோசித்து பேசுங்கள்" எனக் கூறியுள்ளார்.
??? pic.twitter.com/b4QPvMCXWf
— Khatija Rahman (@RahmanKhatija) September 11, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |