இந்த மருந்து 99.9 சதவீதம் கொரோனாவை கொல்லுகிறது! பரிசோதனையில் நிரூபணம்: மகிழ்ச்சி தரும் செய்தி
கனடாவைச் சேர்ந்த சானோடைஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்பிரே தடுப்பூசி மருந்து, 99.9 சதவீதம் கொரோனா வைரசை கொல்லும் செயல்திறன் வாய்ந்தது என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சில மருந்துகள் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கும்போதே சில நிபந்தனைகளுடன், அவசர கால பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதேபோல் மூக்குவழியாக செலுத்தி கொரோனாவை அழிக்கக்கூடிய சில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கனடாவின் வான்கூவரைச் சேர்ந்த சானோடைஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ள நைட்ரிக் ஆக்சைட் நேசல் ஸ்பிரே மருந்தானது (என்ஓஎன்எஸ்), 99.9 சதவீதம் செயல்திறன் மிக்கது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உட்டா மாநில பல்கலைக்கழகத்தின் ஆன்டிவைரல் ஆராய்ச்சி மையத்தில் நடந்த இந்த பரிசோதனையில் செயல்திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த பரிசோதனை 2-ஆம் கட்டத்தில் உள்ளது. இது நல்ல பலனை தருவதால், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த மருந்துக்கு பிரித்தானியாவில் விரைவில் அங்கிகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பிரித்தானியாவில் உள்ள ஆஷ்போர்ட் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனைகள் என்எச்எஸ் அறக்கட்டளை மூலம் இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் பணி வேகமாக நடைபெறுகிறது.
இந்த நைட்ரிக் ஆக்சைடை அடிப்படையாகக் கொண்ட இந்த மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்தால், கொரோனா வைரசானது நுரையீரலுக்குள் செல்வதற்கு முன்பாக அவற்றை அழித்துவிடுகிறது.
மக்கள் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இந்த மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்துகொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம், கொரோனா வைரஸ் உள்ளே நுழையாமல் தடுக்கப்படும்.
அதே போல் தொண்டையில் மருந்து படும்படி வாய் கொப்பளித்தல், மூக்கு துவாரங்களில் மருந்தை செலுத்தி சுத்தம் செய்தல் போன்ற சிகிச்சையும் செய்ய முடியும்.