இது மார்க்கெட்டிங் தந்திரம்! மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசன் குறித்து பேசிய பாஜகவை சேர்ந்த நடிகை கவுதமி
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மார்க்கெட்டிங் தந்திரத்தைக் கடைபிடிக்கிறது என்று நடிகை கவுதமி கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான கவுதமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதி அவருக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்து அங்கு பணிகளை அவர் மேற்கொண்டார்.
ஆனால் அத்தொகுதி இறுதியில் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இருந்தபோதிலும் தற்போது அவர் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கவுதமி கூறுகையில், கமல்ஹாசனை பிரிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது. அது முடிந்துபோன பிரச்சினை.
மக்கள் நீதி மய்யம் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் புதிய கட்சி தொடங்கும்போது இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வருவோம் என கூறுவது வழக்கம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இதுபோன்ற மார்க்கெட்டிங் தந்திரத்தைக் கடைபிடிக்கிறது என கூறினார்.
கமல்ஹாசனும், கவுதமியும் 12 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.