ரஷ்ய இராணுவ வீரர் போரில் கொல்லப்படும் முன் தன் தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி: இதயத்தை நொறுக்கும் அந்த வார்த்தைகள்
புடினின் நாடு பிடிக்கும் ஆசையால் அவர் உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள நிலையில், உக்ரைன் தரப்பில் மட்டுமல்ல, ரஷ்ய தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
அவ்வகையில், உக்ரைனில் போரில் கொல்லப்படுவதற்கு முன், ரஷ்ய இராணுவ வீரர் ஒருவர் தன் தாய்க்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்திகள் குறித்த மனதை கலங்க வைக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த இராணுவ வீரரின் தந்தை அவருக்கு ஒரு பார்சல் அனுப்ப விரும்புகிறார். ஆகவே, அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பதை அறிய விரும்புகிறார்கள் அவரது பெற்றோர். ஆனால், தான் தற்போது பயிற்சியில் இல்லை, யுத்தகளத்தில் இருக்கிறேன் என்கிறார் அந்த வீரர்.
இதோ, கல் மனதையும் நொறுக்கும் அந்த வார்த்தைகள்...
அம்மா, நாங்கள் இப்போது இராணுவப் பயிற்சியில் இல்லை. நான் உக்ரைனில் இருக்கிறேன், இங்கே ஒரு பயங்கர போர் நடந்துகொண்டிருக்கிறது.
எனக்கு பயமாக இருக்கிறது. நாங்கள் குண்டு வீசிக்கொண்டிருக்கிறோம், பொதுமக்கள் மீது கூட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
அவர்கள் எங்களை வரவேற்பார்கள் என்று எங்களுக்கு கூறப்பட்டது. ஆனால், அவர்கள் எங்கள் டாங்குகளுக்கு முன்னால் படுத்துக்கொள்கிறார்கள். எங்களை முன்னேற விடமாட்டேன்கிறார்கள்.
அவர்கள் எங்களை பாசிஸ்டுகள் என அழைக்கிறார்கள் அம்மா, எங்களுக்கு அதைக் கேட்க கஷ்டமாக இருக்கிறது.
இதுதான் அந்த ரஷ்ய இராணுவ வீரர் அனுப்பிய கடைசி செய்தி.
அந்த செய்தி அனுப்பிய சிறிது நேரத்திற்குள் அவர் கொல்லப்பட்டுவிட்டார்!
இந்த தகவலை வெளியிட்டவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான உக்ரைன் தூதரான Sergiy Kyslytsya.
இப்படி ரஷ்ய தரப்பில் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள், உக்ரைன் தரப்பில் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆக, நமக்கு அருகிலுள்ளவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள் என்று கூறிய Sergiy Kyslytsya, உக்ரைன் தப்பவில்லையென்றால், சர்வதேச அமைதியும் தப்பாது என்றார்.
உக்ரைன் பிழைக்கவில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையும் தப்பாது, உக்ரைன் வீழுமேயானால், அடுத்து ஜனநாயகமே வீழும் என்பதில் சந்தேகமேயில்லை என்றார் அவர்.