சொல்வதைக் கேட்கும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம்: இலங்கையில் வெடித்த போராட்டத்தில் இதுவரை
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் இன்று மீண்டும் வெடித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பொலிஸ் தடுப்புகளை தகர்த்து ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டில் இந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு பேரணிகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும்பாலானவர்கள் கருப்பு உடையணிந்து, நாட்டின் கொடியை ஏந்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் புகுந்துள்ளனர்.
ஜனாதிபதி இல்லத்துற்குள் இருந்து பேஸ்புக் நேரலை செய்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்குள்ள அறைகள் ஒவ்வொன்றாக புகுந்து ஜனாதிபதிக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, ஜனாதிபதி இல்லத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் பலர் குளிப்பது காணொளியாக வெளியாகி பெருமளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. போராட்டம் நடைபெறுவது முன்னரே தெரிந்துகொண்டமையால், ஜனாதிபதி இல்லம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என எவரும் சம்பவத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் காணப்படவில்லை. இதனிடையே, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் செயலகம் மற்றும் நிதியமைச்சின் அலுவலக கதவுகளை உடைத்து திறந்தனர்.
இராணுவம் மற்றும் பொலிசாரால் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது என்றே கூறப்படுகிறது. மேலும், பொலிசார் வானத்தில் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய பாதுகாப்பான ஆனால் வெளியிடப்படாத இடத்திற்கு மாற்றப்பட்டார் என்ற தகவல் வெளியானது. மேலும், பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் கையாளும் விதத்தில் அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டுமின்றி, பிரதமர் விக்கிரமசிங்கவும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்று அரசாங்க வட்டாரம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. இன்றைய போராட்டங்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 39 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி பதவி விலகும் மட்டும் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்றே மக்கள் பிடிவாதமாக கூறியுள்ளனர். உணவு, எரிவாயு, எரிபொருள் இல்லாமல் மக்கள் முற்றிலும் சோர்ந்து போயுள்ளனர்.
போதும் போதும் இதுவரை அனுபவித்த சுமை. நாங்கள் எங்கள் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் திரும்பப் பெற விரும்புகிறோம் என மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.