ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம்
ஈரானில் இருந்து வெளியாகும் நாளேடு ஒன்றில் பகிரங்கமாக ஜனாதிபதி ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் இராணுவம் முழு உஷார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல்
ஈரான் மீது குண்டுவீச்சு தாக்குதல் குறித்து மிரட்டல் விடுத்திருந்த ட்ரம்புக்கு, ஈரான் நாளேடு ஒன்று பதிலடியாக கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதனையடுத்தே அமெரிக்கா தாக்குதல் தொடுக்கலாம் என்ற அச்சத்தில் இராணுவத்தை தயார் நிலையில் நிறுத்தியுள்ளனர்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியும் ஈரானின் இராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்க ஆணையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ளவோ ட்ரம்ப் நிர்வாகத்தால் ஈரானுக்கு கடுமையான காலக்கெடு விதிக்கப்பட்டது.
ஆனால், ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு உடன்பட காமெனி கடுமையாக மறுத்துவிட்டார், ஈரான் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
அந்த அவமதிப்பால் கோபமடைந்த ட்ரம்ப் ஈரானுக்குள் புகுந்து தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். ஈரான் தனது கொள்கைக்கு இணங்கி அமெரிக்காவுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதன் மீது குண்டு வீசுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் சூளுரைத்தார்.
கொல்ல சதி
இந்த நிலையிலேயே, ஈரான் நாட்டின் மிகப் பிரபலமான Kayhan நாளேட்டில், ஜனாதிபதி ட்ரம்ப் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானிய தளபதி காசிம் சுலைமானியின் படுகொலைக்கு அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரான் தன்னை படுகொலை செய்தால், அந்நாட்டை முற்றிலுமாக அழித்துவிடுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் தனது குழுவிற்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் படுகொலை முயற்சி ஒன்றில் ஜனாதிபதி ட்ரம்பைக் கொல்ல சதி செய்ததாக ஈரானிய முகவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது.
ஏற்கனவே ட்ரம்ப் மற்றும் பிற அமெரிக்க நிர்வாக அதிகாரிகளுக்கு எதிரான ஈரானிய அச்சுறுத்தல்களை பெடரல் அதிகாரிகள் பல ஆண்டுகளாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |