பிரான்சில் 30 பாடசாலைகளுக்கு தலையை துண்டிக்கும் கொடூர வீடியோக்கள்! மின்னஞ்சலால் அதிர்ச்சி
பிரான்சில் உள்ள 30 பாடசாலைகளுக்கு கொடூரமான வீடியோக்கள் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அச்சுறுத்தக்கூடிய வீடியோக்கள்
தலைநகர் பாரிஸில் உள்ள சுமார் 30 பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அச்சுறுத்தக்கூடிய வீடியோக்கள் அனுப்பப்பட்டன.
அவற்றில் தலையை துண்டிக்கும் கொடூர காட்சிகள் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே இணைப்பாக செயல்படும் ENT எனும் இணைய தளத்தின் மூலம் வந்துள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துதல் மற்றும் தூண்டுதல் அடங்கிய கடுமையான அச்சுறுத்தல்களை பாடசாலைகளை பெற்றுள்ளன என்றார்.
உளவியல் ஆதரவு
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளை அடையாளம் காண புலனாய்வாளர்கள் பணியாற்றி வருவதாகவும், அதிர்ச்சியூட்டும் வீடியோக்களை பார்த்த குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு உளவியல் ஆதரவு வழங்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாணவர் ஒருவர் மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்து மர்ம நபர்கள் இந்த செய்தி மற்றும் தலை துண்டிக்கும் வீடியோக்களை அனுப்பியதாக ஆதாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், the Greater Paris பிராந்தியத்தின் மேற்கில் உள்ள 5 பாடசாலைகளுக்கு புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடையே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.