அம்மா இனியும் ஒரு சடலத்துடன் எங்களால் வாழமுடியாது... பொலிசாரை அழைத்த சிறுவன்: வெளியாகியுள்ள கலங்க வைக்கும் விவரங்கள்
அமெரிக்காவில் வீடு ஒன்றிற்கு சென்ற பொலிசார், அங்கு அநாதரவாக விடப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளுடன், அழுகி உருக்குலைந்த ஒரு உடலையும் கண்டுபிடித்துள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
அந்த பிள்ளைகளை அநாதரவாக விட்டுச் சென்ற பெற்றோர் யார் என தற்போது தெரியவந்துள்ளது. அத்துடன், அந்த பெற்றோர் இல்லாதபோது அந்த பிள்ளைகளுக்கு அருகில் வாழும் இருவர் அவர்களுக்கு உணவளித்துக் காப்பாற்றிவந்ததும் தெரியவந்துள்ளது.
டெக்சாஸிலுள்ள வீடு ஒன்றிலிருந்து 15 வயது சிறுவன் ஒருவன் அவசர உதவி கோரி பொலிசாரை அழைத்துள்ளான்.
உடனடியாக அங்கு சென்ற பொலிசார், அங்கு பெற்றோர் இல்லாமல் அநாதரவாக விடப்பட்ட முறையே 7, 10 மற்றும் 15 வயதுடைய மூன்று பிள்ளைகள் தனிமையில் வாழ்ந்துவருவதைக் கண்டுள்ளனர்.
மேலும் அந்த வீட்டை சோதனையிடும்போது, அதே வீட்டில் ஒரு சிறுவன் இறந்து, அவனுடைய உடல் அழுகி, எலும்புக்கூடாகி கிடப்பதைக் கண்ட பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அந்த வீட்டில் ஒரு பிள்ளை இறந்து கிடந்த நிலையில், மற்ற பிள்ளைகள் அதே வீட்டில் மோசமான நிலையில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.
நடந்தது என்னவென்றால், Gloria Y. Williams (35) என்ற பெண்ணும், அவரது காதலரான Brian W. Coulter (31) என்பவரும், Gloriaவின் பிள்ளைகளை வீடு ஒன்றில் அநாதரவாக விட்டு விட்டு வேறொரு வீட்டில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.
இந்த பிள்ளைகள் பசியிலும் பட்டினியிலும் வாழ்ந்துவந்த நிலையில், Erica Chapman என்ற பெண், வீடு ஒன்றில் தனியாக 15 வயது சிறுவன் ஒருவன் வாழ்ந்து வருவதைக் கண்டு, அவன் பசி பட்டினியால் வாடுவதை அறிந்து அவனுக்கு உணவளித்து வந்துள்ளார்.
அத்துடன், அந்த சிறுவன், வீட்டின் பக்கத்தில் வசிக்கும் Trevor Thompson என்ற ஒருவரிடம் சென்று, மொபைல் சார்ஜர் கொஞ்சம் தரமுடியுமா என்று கேட்டிருக்கிறான்.
பரிதாபமான நிலையிலிருந்த அந்த சிறுவனைக் கண்டதும் Trevorக்கு அவன் மீது ஏதோ புரிந்துகொள்ள இயலாத ஒரு பாசம் ஏற்பட, அன்றிலிருந்து அவரும் அவனுக்கு உணவு கொடுக்கத் துவங்கியுள்ளார்.
இருந்தாலும், அவர்கள் இருவருக்குமே, அந்த வீட்டில் மேலும் இரு சிறுவர்கள் இருப்பதும், இந்த 15 வயது சிறுவன் தனக்குக் கிடைத்த உணவைக் கொண்டு அவர்களுக்கும் உணவளித்துவந்ததும் தெரியாது.
அந்த வீட்டில் இறந்து கிடந்த சிறுவன் 8 வயது சிறுவன், உடற்கூறு ஆய்வில், அவன் கடுமையாக தாக்கப்பட்டதைக் காட்டும் வகையில் அவன் உடலில் பல காயங்கள் உள்ளன. அவன் இறந்து ஓராண்டாவது ஆகியிருக்கும் என கருதப்படுகிறது.
சரியான உணவில்லாமல், வீட்டில் மின்சாரமும் இல்லாமல், அழுகிய உடல் ஒன்றுடன் பல மாதங்கள் வாழ்ந்துவந்த நிலையில், திடீரென என்ன தோன்றியதோ தெரியாது அந்த 15 வயது சிறுவனுக்கு, தன் தாயை மொபைலில் அழைத்து போதும் அம்மா, இனி எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டு, பொலிசாரை உதவிக்கு அழைத்துள்ளான்.
அதைத் தொடர்ந்துதான் இந்த பகீர் உண்மைகள் வெளியாகியுள்ளன. தற்போது பொலிசார் குழந்தைகளை மீட்டு அரசின் பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
பிள்ளைகள் தனியாக வாழும் வீட்டின் அருகில் வாழ்ந்தும் பிள்ளைகளை கவனிக்காத Gloria மற்றும் Brian மீது கொலை முதலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. விசாரணை தொடர்கிறது.