எட்டு மணி நேர இடைவெளியில் மூன்று நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம்: நிபுணர்கள் கூறும் விளக்கம்
வெனிசுலாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்துடன், எட்டு மணி நேர இடைவெளியில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவிலும் ஒரே நாளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிபுணர்கள் தரப்பு
புதன்கிழமையன்று வடக்கு கலிபோர்னியாவின் கிராமப்புறப் பகுதியில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது; அதேவேளையில் வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் பாதிப்பையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.

எட்டு மணி நேர இடைவெளிக்குள் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது குறித்து இணையத்தில் ஊகங்கள் எழுந்தன. இந்த நிலையில், நிபுணர்கள் தரப்பு இதில் தொடர்பேதும் இல்லை என விளக்கமளித்துள்ளனர்.
மேலும், அதிக நிலநடுக்க அபாயம் கொண்ட, நன்கு அறியப்பட்ட தட்டு எல்லைகளில் நிகழ்ந்தவை என்பது இந்த நிகழ்வுகளுக்கு இடையிலான ஒரு பொதுவான அம்சம் என விளக்கமளித்துள்ளார் வில்லியம் பார்ன்ஹார்ட்.
இவர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் நிலநடுக்க அபாயங்கள் திட்டத்தின் உதவி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். ஆனால் புதன்கிழமையன்று ஜப்பான், கலிபோர்னியா மற்றும் வெனிசுலாவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நேரம் வெறும் தற்செயல் நிகழ்வுதான் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

பெரிய நிலநடுக்கம்
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மக்கள் வசிக்கும் இடங்களிலிருந்து வெகு தொலைவில் நிகழ்கின்றன என குறிப்பிட்டுள்ள பார்ன்ஹார்ட், புதன்கிழமை மிகவும் விசித்திரமான ஒரு நாளாக இருந்தது, ஏனெனில் மக்கள் உணரக்கூடிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என்றார்.

ஒரு பெரிய நிலநடுக்கம் உலகின் பிற பகுதிகளிலும் நில அதிர்வுகளைத் தூண்ட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். ஆனால், இதுபோன்ற ஒரு தொடர் விளைவு ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் நிகழ்வது அசாதாரணமானது என குறிப்பிட்டுள்ளார் UCLA-வில் குடிசார் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறை இணைப் பேராசிரியரான மார்ட்டின் ஹட்சன்.
கடந்த 100 ஆண்டுகால நிலநடுக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்தினால், இவ்வளவு தொலைவில் நிகழ்ந்த நிலநடுக்கங்களுக்கு இடையே தொடர்பு இருப்பதை நாம் இதுவரை கண்டதில்லை என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |