ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுவதில்லை ஏன்?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடன் தனது வரிப் போரை தொடங்கிய நாளில், ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் தயாரிப்புகளைத் தயாரிக்கத் தொடங்க வேண்டும் என்று தான் விரும்புவதாக தெளிவுபடுத்தினார்.
நடைமுறைக்கு ஏற்றதல்ல
ஆனால் தொழில்துறை நிபுணர்களும் விமர்சகர்களும், அமெரிக்காவில் தற்போது பெரிய அளவிலான உற்பத்தி நடைமுறைக்கு ஏற்றதல்ல என்று கூறினர். தற்போது, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கின் 2024 காணொளி ஒன்று மீண்டும் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தொடர்புடைய காணொளியில் டிம் குக் இந்த விவகாரத்தில் விளக்கமளித்திருந்தார். அதில், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் தனது தயாரிப்புகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்வது பலர் நினைப்பது போல் குறைவான சம்பளத்தில் ஆட்கள் கிடைக்கலாம் என்ற காரணத்தால் அல்ல.
பொதுவான ஒரு கருத்து, சீனாவில் மலிவான கட்டணத்தில் பொருட்களை தயாரிக்கலாம் என்பது. ஆனால் அப்படியான ஒரு நிலை பல ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் ஒழிந்துவிட்டது. இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் தங்கள் தயாரிப்புகளை முன்னெடுப்பதன் காரணம் அங்குள்ள மக்களின் திறமைகளை நம்பி மட்டுமே என்றார்.
சீனாவில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான திறமையான தொழிலாளர்கள் இருப்பார்கள். ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மேம்பட்ட கருவிகளும் உயர் துல்லியமும் தேவை. அப்படியான திறமையும் அனுபவமும் சீனாவில் மிக ஆழமாக வளர்ந்துள்ளது.
மாற்ற வாய்ப்பில்லை
இப்படியான திறமைகள் கொண்ட அனுபவசாலிகளை அமெரிக்காவில் திரட்டுவது கடினம். அமெரிக்காவில் அப்படியான பொறியாளர்களின் ஒரு கூட்டத்தை கூட்டியபோது, ஒரு அறை நிரம்பும் அளவுக்கு கூட ஆட்கள் வரவில்லை என்றும், ஆனால் சீனாவில் பல கால்பந்து மைதானங்களில் நிரப்பும் அளவுக்கு பொறியாளர்களை திரட்ட முடியும் என்றார்.
ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் அழுத்தம் இருந்தபோதிலும், ஆப்பிள் தனது ஐபோன் உற்பத்தியை அமெரிக்காவிற்கு விரைவில் மாற்ற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதுடன், உலகின் இரண்டாவது பெரிய ஐபோன் தொழிற்சாலையை கட்டமைக்கும் வகையில் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 22 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |