இலங்கை தமிழர்கள் வசிக்கும் இடம் பக்கத்திலேயே இருக்கு! அதனால் வழங்க முடியாது... தமிழர் ரவிச்சந்திரனின் தாயார் மனு நிராகரிப்பு
தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு கொடுக்க இயலாது என்பதால் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் ரவிச்சந்திரன், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ளார்.
என் மகனுக்கு நீண்ட கால பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு, ரவிச்சந்திரனுக்கு பரோல் மனுவை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் பொலிசார் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். எனவே ரவிச்சந்திரனுக்கு பாதுகாப்பு வழங்க இயலாத நிலை உள்ளது.
ரவிச்சந்திரன் வீடு அருகே இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் உள்ளது. பாதுகாப்பற்றதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது என காவல்துறை ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மனுதாரர் தரப்பில் போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை. எனவே ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.