உக்ரைனுக்கு எதிராக போராட வலுக்கட்டாயமாக அனுப்பப்படும் தமிழக மாணவர்.., 68 எம்பிக்கள் கடிதம்
உக்ரைனுக்கு எதிராக போராட தமிழக மாணவர் வலுக்கட்டாயமாக அனுப்பப்படும் விவகாரத்தில் 68 எம்.பி.க்கள் உதவி கேட்டு இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
எம்பிக்கள் கடிதம்
தமிழ்நாட்டின் கடலூரைச் சேர்ந்த 22 வயது மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன், தற்போது ரஷ்யாவில் படித்து வருகிறார். இவர் ஜூலை 12 அன்று தனது குடும்பத்தினருக்கு ஒரு தொந்தரவான குரல் செய்தியை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
அந்தச் செய்தியில், உக்ரைன் போர் முனையில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுவார் என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்தினார்.
மாணவர் கிஷோர் 2023 ஆம் ஆண்டில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவரது குடும்பத்தினர் இப்போது அவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவின் போர் முயற்சியில் சேர அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் "கிஷோர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிரான போரில் போராட கட்டாயப்படுத்தப்படுகிறார்" என்று குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், இந்திய அரசு தலையிட்டு அவர் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ திங்கள்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை சமர்ப்பித்து, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிடக் கோரினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |