பாரீஸைப்போல மாறவேண்டும்... பிரித்தானிய இயற்கை ஆர்வலர்கள் விருப்பம்
பாரீஸைப்போலவே பிரித்தானிய நகரங்களும் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாத இடங்களாக மாறவேண்டும் என 150க்கும் அதிகமான கவுன்சிலர்களும், 15,000 பொதுமக்களும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
பாரீஸைப்போல மாறவேண்டும்
பிரான்சின் மற்ற நகரங்களைப்போலவே, தலைநகரான பாரீஸ் நகரமும், ஏழு ஆண்டுகளாக பூச்சிக்கொல்லி ரசாயனங்களைப் பயன்படுத்துவதில்லை.
சமீபத்தில் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து, தற்போது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையிலும், அங்கு ஒரு சொட்டு பூச்சிக்கொல்லி ரசாயனம் கூட பயன்படுத்தப்படவில்லை.
1990களில் பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் பயன்பாட்டைக் குறைக்கத் துவங்கியது பாரீஸ். அதன்பின், 2017 முதல், பிரான்ஸ் முழுவதிலுமே பூச்சிக்கொல்லி ரசாயனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
2019 முதல், தனியார் தோட்டங்களிலும் பூச்சிக்கொல்லி ரசாயனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பூச்சிக்கொல்லி ரசாயனங்களுக்கு மாற்றாக ஏராளமான ரசாயனமற்ற பொருட்கள் உள்ளன. பாரீஸ் முதலான நூற்றுக்கணக்கான நகரங்கள் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கமுடியும் என்பதை நிரூபித்துள்ளன.
ஆகவே, பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்றுள்ள அரசும், பிரித்தானியா முழுவதும் பூச்சிக்கொல்லி ராசாயனங்கள் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும் என, பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொண்டு வரும் பிரித்தானிய இயற்கை ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |