2 வயது சிறுமியை சூட்கேஸுக்குள் அடைத்த பெண்: பேருந்தில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!
நியூசிலாந்து பஸ்ஸில் சூட்கேஸில் 2 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூட்கேஸுக்குள் இரண்டு வயது சிறுமி
நியூசிலாந்து பஸ் ஒன்றின் லக்கேஜ் கம்பார்ட்மென்டில் (luggage compartment) சூட்கேஸுக்குள் வைக்கப்பட்டிருந்த இரண்டு வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார்.
ஆக்லாந்தில் இருந்து 60 மைல் தொலைவில் உள்ள கைவாகா என்ற இடத்தில், பஸ்ஸை நிறுத்திய போது, சூட்கேஸுக்குள் அசைவு இருப்பதை பேருந்து சாரதி ஒருவர் கவனித்துள்ளார்.
ஒரு பயணி, லக்கேஜ் கம்பார்ட்மென்டை அணுகுமாறு ஓட்டுநரிடம் கேட்டுக் கொண்டபோது, அவர் அந்த சூட்கேஸை திறந்து பார்த்ததில், அதற்குள் சிறுமி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சூடாக இருந்த சிறுமியின் உடல்
துப்பறியும் தலைமை ஆய்வாளர் சைமன் ஹாரிசன் அளித்த தகவலின்படி, குழந்தை “மிகவும் சூடாக இருந்தது, ஆனால் வேறு எந்த உடல்நலக் குறைவும் இன்றி நலமாக இருந்தது.” எனத் தெரிவித்தார்.
அந்தச் சிறுமி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இளம்பெண் கைது
சிறுவர் மற்றும் சிறுமிகளை கொடுமைப்படுத்துதல் அல்லது புறக்கணித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 27 வயது பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்தப் பெண் வங்காநியிலிருந்து (Whangarei) ஆக்லாந்திற்கு பஸ்ஸில் பயணித்துள்ளார்.
அப்போது குழந்தையை லக்கேஜ் கம்பார்ட்மென்டில் வைத்துள்ளார். அவரது இந்தச் செயல் “மூச்சுத்திணறல், நீர்ச்சத்து குறைபாடு, கார்பன் மோனாக்சைடு விஷம், அதிக வெப்பம், உளவியல் அதிர்ச்சி உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும்” என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணின் வழக்கறிஞர், அவருக்கு ரகசியம் காக்கப்பட வேண்டும் எனவும், அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட வேண்டும் எனவும் கோரினார்.
அந்தப் பெண் மீண்டும் செவ்வாய்க்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். தலைமை துப்பறியும் ஆய்வாளர் ஹாரிசன், பஸ் ஓட்டுநரின் விரைவான செயலைப் பாராட்டி, “அவரது செயல் ஒரு பெரிய ஆபத்தைத் தடுத்துவிட்டது” என்று கூறினார்.
இந்தச் சம்பவம் நடந்த பேருந்து, என்ட்ராடா டிராவல் குரூப் நிறுவனத்துக்குச் சொந்தமான இன்டர்சிட்டி என்ற தேசிய பேருந்து வழித்தடம் ஆகும். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |