டோக்கியோ ஒலிம்பிக்ஸ்! தங்கப்பதக்கம் எண்ணிக்கையில் சீனாவை முந்த முடியாமல் தவிக்கும் நாடு
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பதக்க எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், சீனாவை விட 4 தங்கப்பதக்கம் குறைவாக பெற்று தரவரிசையில் அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்க பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா, சீனாவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பொதுவாக பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் நடைபெறும்போது சீனா ஆதிக்கம் செலுத்தும்.
தடகள போட்டிகள் தொடங்கியதும் அமெரிக்கா அதிகமான பதக்கங்களை பெற்று முன்னிலை பெறும். நீச்சல் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இந்த முறை தடகள போட்டிகள் தொடங்கி இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது. போட்டி முடிவடைய இன்னும் 3 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், சீனாவே தங்கப்பதக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சீனா இன்று காலை 10.45 மணி நிலவரப்படி 34 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 74 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 30 தங்கம், 35 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
பதக்க எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் பெற்றாலும், தங்கத்தில் சீனாவை விட நான்கு குறைவாக உள்ளது. தங்கப்பதக்கத்தில் சீனாவை முந்தினால் மட்டுமே, டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்க முதலிடம் பிடிக்க முடியும்.
ஜப்பான் 22 தங்கப்பதக்கத்துடன் 3-வது இடத்திலும், 17 தங்கத்துடன் அவுஸ்திரேலியா 4-வது இடத்திலும், 16 தங்கத்துடன் ரஷியா மற்றும் இங்கிலாந்து முறையே 5-வது மற்றும் 6-வது இடத்தை பிடித்துள்ளது.