இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு அதிக ஆயுளாம்: ரகசியம் என்ன தெரியுமா?
உலக மக்கள்தொகை மதிப்பாய்வின் (World Population Review) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உலகிலேயே மிக அதிக சராசரி ஆயுட்காலம் கொண்ட முதல் 10 நாடுகள் எவை என்றும், அந்த நாடுகளின் மக்கள் நீண்ட காலம் வாழ்வதற்கான காரணங்கள் என்னென்ன என்றும் இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
ஆயுட்காலம் ஏன் முக்கியம்?
ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் அந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் சராசரி ஆயுட்காலம் என்பது அந்நாட்டின் வலுவான சுகாதாரக் கட்டமைப்பு, தரமான உணவு முறை, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான சமூக உறவுகள் போன்ற முக்கியமான காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.
இந்த அடிப்படை காரணிகள் அந்நாட்டு குடிமக்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ வழிவகை செய்கின்றன. மேலும், உடல் நலத்துடன் மன நலனுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள் உலக ஆயுட்காலப் பட்டியலில் எப்போதும் முன்னணியில் உள்ளன.
உலகிலேயே அதிக ஆயுட்காலம் கொண்ட முதல் 10 நாடுகள்
உலக மக்கள்தொகை மதிப்பாய்வின் தற்போதைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அதிக சராசரி ஆயுட்காலம் கொண்ட முதல் 10 நாடுகளையும், அவர்கள் நீண்ட காலம் வாழ்வதற்கான ஆரோக்கிய ரகசியங்களையும் இங்கே காணலாம்.
முதலிடம்: ஹாங்காங் - 85.77 ஆண்டுகள்
இந்தப் பட்டியலில் ஹாங்காங் முதலிடத்தில் உள்ளது.
இங்கு வசிப்பவர்களின் சராசரி ஆயுட்காலம் 85.77 ஆண்டுகளாக உள்ளது.
அந்நாட்டின் மேம்பட்ட சுகாதார வசதிகள், தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் காய்கறிகள், கடல் உணவுகள் நிறைந்த சத்தான உணவு முறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
மேலும், நோய்கள் வருவதற்கு முன்பே தடுக்கும் முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகள் மற்றும் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் கலாச்சாரம் ஆகியவையும் ஹாங்காங்கின் நீண்ட ஆயுளுக்கு உதவுகின்றன.
இரண்டாம் இடம்: ஜப்பான் - 85 ஆண்டுகள்
இரண்டாவது இடத்தில் ஜப்பான் உள்ளது. இங்குள்ள மக்களின் சராசரி ஆயுட்காலம் 85 ஆண்டுகளாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஜப்பானியர்களின் தனிப்பட்ட ஒழுக்கம், குறைந்த கொழுப்புச் சத்துள்ள உணவுப் பழக்கம் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை போன்ற காரணிகள் இதற்கு முக்கிய பங்காற்றுகின்றன.
பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் சமூக உறவுகளுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் குறிப்பிடத்தக்கது.
முதல் ஐந்து இடங்கள்: தென் கொரியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து
தென் கொரியா (84.53 ஆண்டுகள்) மூன்றாவது இடத்திலும், பிரான்ஸ் (84.31 ஆண்டுகள்) நான்காவது இடத்திலும், சுவிட்சர்லாந்து (84.23 ஆண்டுகள்) ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
இந்த நாடுகளில் உள்ள மக்கள் ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி மற்றும் மன நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதே இதற்குக் காரணம்.
உயர்தர மருத்துவ வசதிகள் மற்றும் சமூக ஆதரவு அமைப்புகள் இந்த நாடுகளின் ஆயுட் காலத்தை அதிகரிக்கின்றன.
அடுத்த ஐந்து இடங்கள்: ஆவுஸ்திரேலியா முதல் நார்வே வரை
அடுத்த ஐந்து இடங்களில் ஆவுஸ்திரேலியா (84.21 ஆண்டுகள்), இத்தாலி (84.03 ஆண்டுகள்), சிங்கப்பூர் (84 ஆண்டுகள்), ஸ்பெயின் (83.96 ஆண்டுகள்), நார்வே (83.61 ஆண்டுகள்) ஆகியவை முறையே 6 முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன.
இந்த நாடுகளிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் மக்களின் நீண்ட ஆயுளுக்கு உறுதுணையாக உள்ளன.
இந்தியாவின் ஆயுட்காலம்
உலக அளவில் அதிக ஆயுட்காலம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா இந்தப் பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது. ஹாங்காங், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் 84 வயதிற்கு மேற்பட்ட சராசரி ஆயுட்காலத்தைக் கொண்டிருக்கும் நிலையில், அதிக ஆயுட்காலம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 125 வது இடத்தில் உள்ளது.
140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில், சராசரி ஆயுட்காலம் 72.48 ஆண்டுகளாக உள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 74.13 ஆண்டுகளாகவும், ஆண்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 70.95 ஆண்டுகளாகவும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |