அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த டாப் 10 வீரர்கள்: இலங்கை ஜாம்பவான் எந்த இடத்தில்?
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த துடுப்பாட்ட வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
ஓல்ட் டிராஃப்போர்ட் டெஸ்டில் ஜோ ரூட் சதம் விளாசியதன் மூலம் இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா சாதனையை சமன் செய்தார்.
இதன்மூலம் டெஸ்டில் அதிக சதங்கள் அடித்த டாப் 10 வீரர்களின் பட்டியல் மாற்றம் கண்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
குறிப்பாக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் இவர்தான். அத்துடன் 15,921 ஓட்டங்கள் குவித்தும் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் 51 சதங்கள் அடித்து முதலிடத்தில் பல ஆண்டுகளாக நீடிக்கிறார். 68 அரைசதங்களும் அடித்துள்ளார்.
ஜேக்கியூஸ் கல்லிஸ்
தென் ஆப்பிரிக்காவின் ஜேக் கல்லிஸ் (Jack Kallis) மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.
இவர் 13,289 ஓட்டங்கள் மற்றும் 292 விக்கெட்டுகளுடன் 45 சதங்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ரிக்கி பாண்டிங்
அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) 41 சதங்கள் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இவர் அதிக ஓட்டங்கள் (13,378) எடுத்த அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றவராவார்.
ஜோ ரூட்
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிரட்டி வரும் ஜோ ரூட் (Joe Root) 38 சதங்கள் அடித்துள்ளார்.
அதே சமயம் டெஸ்டில் அதிக ஓட்டங்கள் (13,409) எடுத்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் ரூட் உள்ளார்.
குமார் சங்ககாரா
இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா (Kumar Sangakkara) 134 டெஸ்ட்களில் 12,400 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இவர் 38 சதங்கள் மற்றும் 52 அரைசதங்கள் அடித்து 5வது இடத்தில் உள்ளார். இதில் 11 இரட்டை சதங்கள் அடங்கும்.
ஸ்டீவன் ஸ்மித்
அவுஸ்திரேலியாவின் 10,000 ஓட்டங்களை கடந்த வீரர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith), 36 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார்.
மேலும் 4 இரட்டை சதங்களுடன் 43 அரைசதங்களும் அடித்துள்ளார். இவரது துடுப்பாட்ட சராசரி 56.03 ஆகும்.
ராகுல் டிராவிட்
இந்திய டெஸ்ட் அணியின் தடுப்புச்சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட் (Rahul Dravid) 36 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார்.
இவர் 164 டெஸ்ட்களில் 13,288 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 5 இரட்டை சதங்கள் மற்றும் 63 அரைசதங்களும் அடங்கும்.
யூனில் கான்
பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரரான யூனிஸ் கான் (Younis Khan) 34 சதங்கள் அடித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்த இவர், 118 டெஸ்ட்களில் 10,099 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர்
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar) 34 சதங்கள் அடித்து 9வது இடத்தில் உள்ளார்.
இவர் 125 டெஸ்ட் போட்டிகளில் 10,122 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 4 இரட்டை சதங்கள் மற்றும் 45 அரைசதங்கள் அடங்கும்.
பிரையன் லாரா
மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கேப்டனான பிரையன் லாரா (Brian Lara) டெஸ்டில் 34 சதங்கள் அடித்துள்ளார்.
ஒரே இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் (400*) எடுத்த வீரர் எனும் சாதனையை கொண்டுள்ள லாரா, 131 டெஸ்ட்களில் 11,953 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |