ஈரானின் ஷாஹெத் ட்ரோன்கள் சரமாரி தாக்குதல்... நெருப்பு கோளமான பிரபல துபாய் ஹொட்டல்
ஈரானிய ஷாஹெத் ட்ரோன்கள் தாக்கியதில் துபாய் ஹொட்டல் ஒன்று தீப்பிடித்து எரிந்தத சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாஹெத் ட்ரோன்கள்
துபாய் மாகாணத்தில் அமைந்துள்ள பிரபலமான ஹொட்டல்களில் ஒன்றான Fairmont The Palm என்ற சொகுசு ஹொட்டல் மீதே ஈரான் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

ஹொட்டல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, துபாய் வானத்தில் கரும்புகை எழுந்தது. ஈரானின் ஷாஹெத் ட்ரோன்கள் தாக்கியுள்ளது வெளியான காணொளியில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஏவுகணைச் சிதைவுகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இன்று நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் ராக்கெட்டுகளால் தாக்கியது.
முதன்மையான சுற்றுலா பகுதியான துபாயும் ஈரானின் தாக்குதலில் சிக்கியுள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இனி தங்களுக்கு என வரம்புகள் இல்லை என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

நால்வர் காயம்
இதனிடையே, Fairmont The Palm ஹொட்டல் மீது தாக்குதல் நடந்துள்ளதை துபாய் அரசாங்க செய்தித்தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். இதில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நெருப்பு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சேவைகள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தடுத்து முறியடித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் ஈரானால் தாக்கப்பட்டுள்ளது அதிகாரிகள் தரப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |