அது தவறு தான்... இன்னொரு விவகாரத்தில் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர் சன்னா மரின்
பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் விருந்தினர்கள் சிலர் மேலாடை இன்றி காணப்பட்டதாக குற்றச்சாட்டு
பிரதமர் சன்னா மரின் புகைப்படங்கள் தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார்
பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் விருந்தினர்கள் சிலர் மேலாடை இன்றி காணப்படுவதாக வெளியான புகைப்படத்திற்கு பின்லாந்து பிரதமர் சன்னா மரின் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்துகொண்டு விருந்து கொண்டாட்டங்களில் அதிகமாக ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் விருந்தினர்கள் சிலர் மேலாடை இன்றி காணப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் நடந்த விருந்து ஒன்றில் இரண்டு முக்கிய நபர்கள் தொடர்பிலேயே குறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் சன்னா மரின் குறித்த புகைப்படங்கள் தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார். குறித்த புகைப்படத்தில் பெண்கள் இருவர் மேலாடை இன்றி முத்தமிட்டுக் கொள்வதுடன், அவர்களின் மார்பை பின்லாந்து என பொறிக்கப்பட்டுள்ள அடையாள அட்டையால் மறைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளித்துள்ள பிரதமர் சன்னா மரின், ஜூலை மாதத்தில் Ruisrock இசை விழாவிற்கு பின்னர் பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்து கொண்டாட்டத்தில் குறித்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
பின்லாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், பிரதமர் இல்லத்தில் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கழிவறைக்கு அருகாமையில் குறித்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இத்தகைய புகைப்படங்கள் பதிவு செய்திருக்க கூடாது என குறிப்பிட்டுள்ள சன்னா மரின், ஆனால் அந்த விருந்தில் தவறான எந்த விடயமும் நடக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
36 வயதான சன்னா மரின் 2019ல் பின்லாந்தின் பிரதமர் பொறுப்புக்கு வந்தார். சமீபத்தில் நேட்டோ உறுப்பினராக இணைய இருப்பதாக அறிவித்த நிலையில்,
அவரைச் சுற்றியே அரசியல் நாடகங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.