ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே ஒரே வழி... அச்சுறுத்தல் குறித்து நெதன்யாகு
Netanyahu says toppling Iran government only way: ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே ஒரே வழி என்று நெதன்யாகு.
ஈரான் விடுக்கும் அச்சுறுத்தலை நீக்குவதற்கான ஒரே வழி, அந்த நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதுதான் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து முயற்சி
இஸ்ரேலின் தெற்கு நகரமான டிமோனாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, ஈரான் நம்மை அழிக்க விரும்பியது; நாம் அவர்களைத் தடுத்து நிறுத்தினோம்.
அவர்கள் அணு குண்டுகளைத் தயாரிக்க விரும்பினர்; நாம் அதையும் தடுத்து நிறுத்தினோம்... ஆனாலும் அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தொடர்ச்சியான இந்த நகர்வுகளை நாம் தடுத்து நிறுத்த ஒரே வழி, அவர்களின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே என்றார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், மொசாத் மற்றும் நமது அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும் நான் விடுத்துள்ள உத்தரவு இதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்; இருப்பினும், அந்த உத்தரவு எப்போது அல்லது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.
மறுதேர்தலுக்கான கடுமையான போட்டி அதன் கடைசி வாரத்தை நெருங்கிய வேளையில், நெதன்யாகு இந்த அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்குத் திட்டமிடுமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு நெதன்யாகு அறிவுறுத்தியிருந்தார் என, புதன்கிழமை ஃபைனான்சியல் டைம்ஸ் மேற்கோள் காட்டிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன; ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக, இஸ்ரேலுடன் இணைந்து பிப்ரவரி மாதம் அமெரிக்கா தொடங்கிய போரை மீண்டும் தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று அமெரிக்கத் தலைவர் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
அச்சுறுத்தல் ஏற்படலாம்
இந்த வாரம், இஸ்ரேலியத் தேர்தலில் தனக்கு ஆதரவளித்ததற்காக ட்ரம்ப்புக்கு காணொளி ஒன்றில் நன்றி தெரிவித்த நெதன்யாகு, ஈரானில் இரு தலைவர்களுக்கும் முடிக்க வேண்டிய ஒரு பணி உள்ளது என்றும் கூறினார்.
இதனிடையே, ஈரானிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

தெற்கு இஸ்ரேலில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அவர், ஈரானிய நிர்வாகம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது; இந்த பலவீனம், அந்த நிர்வாகத்தை மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டக்கூடும் என்பதை இஸ்ரேல் அரசாங்கம் உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் இனி இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தால், ஈரான் மொத்தமாக அழியும் என்றார். மட்டுமின்றி, வரவிருக்கும் வாக்கெடுப்பை சீர்குலைக்க இஸ்ரேலின் எதிரிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.