கனடாவில் தொடக்கப் பள்ளி அருகே கையில் துப்பாக்கியுடன் சுற்றிய மர்ம நபரால் பரபரப்பு! சுட்டுக் கொன்ற பொலிஸ்
கனடாவின் டொரோண்டோ நகரில் தொடக்கப் பள்ளி அருகே கையில் துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவர், தொடக்கப்பள்ளி ஒன்றில் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டொரோண்டோவில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றின் அருகே சந்தேகத்திற்கிடமாக நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடமாடியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக இது குறித்து அறிந்த பொலிஸார், அப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு குறித்த நபரை சுற்றி வளைத்த பொலிஸார், டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மனதில் வைத்து எந்தவித தயக்கமுமின்றி சுட்டுக்கொன்றனர்.
Photo Credit: REUTERS
இந்த சம்பவம் குறித்து பேசிய டொரோண்டோ நகர பொலிஸ் உயரதிகாரிஜேம்ஸ் ரமேர், கொல்லப்பட்ட நபர் 20 வயதிற்கு உட்பட்ட நபராக இருக்கலாம். ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், தன்னால் கூடுதல் விவரங்களை அளிக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும் அவர், 'பொது பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. பள்ளிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியை நான் புரிந்துகொள்கிறேன். அதே போல், அமெரிக்காவில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இது எந்த அளவுக்கு அதிர்ச்சிகரமானதாக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது' என தெரிவித்தார்.
Photo Credit: Chris Helgren/Reuters