10 மணி நேர போராட்டம்: ஜப்பானில் மாயமான சுற்றுலா படகு தொடர்பில் வெளிவரும் தகவல்
ஜப்பானில் சுற்றுலா பயணிகளுடன் மாயமான படகில் ஒருவர் கூட உயிருடன் தப்பவில்லை என 10 மணி நேர தேடுதலுக்கு பின்னர் கடலோர காவல்படை கூறியுள்ளது.
மொத்தம் 24 பயணிகளுடன் மாயமான சுற்றுலா படகு தொடர்பில் 6 ரோந்து படகுகள், 5 குட்டி விமானங்கள், மற்றும் சிறப்பு வீரர்கள் குழு மொத்தம் 10 மணி நேரம் தேடுதலில் ஈடுபட்டுள்ளது. இ
ருப்பினும் உயிருடன் எவரும் தப்பவில்லை என குறிப்பிட்டுள்ள கடலோர காவல்படை, தேடுதல் நடவடிக்கையானது தொடரும் என்றே குறிப்பிட்டுள்ளது.
மதியத்திற்கு முன்னர் குறித்த படகில் இருந்து அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் படகில் தண்ணீர் புகுந்ததால், பயணிகளுடன் கடலில் மூழ்கியிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
சாரதி மற்றும் உதவியாளர் இருவருடன் மொத்தம் 26 பேர்கள் சம்பவத்தின் போது படகில் பயணித்துள்ளனர். மேலும், கடல் சீற்றத்துடனும், பலத்த காற்றும் வீசியதால் பெரும்பாலான படகுகள் மதியத்திற்கு மேல் துறைமுகம் திரும்பியுள்ளதாகவும், ஆனால் குறித்த சுற்றுலா படகானது விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, வேகமாக மூழ்கும் படகில் இருந்து பயணிகள் வெளியே குதிக்க முடியாதபடி, அதன் ஜன்னல்கள் பலத்த காற்றில் இருந்து அவர்களைக் காக்க மூடப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்த போது உறையவைக்கும் குளிர் காணப்படுவதால் விபத்தில் சிக்கியவர்கள் உயிர் தப்பும் வாய்ப்பும் மிகவும் குறைவு என்றே நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.