அபராதம் செலுத்தாமல் விட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து - வருகிறது புதிய விதி
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை செலுத்தாமல் இருந்தால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் விதியை இந்திய அரசு கொண்டு வர உள்ளது.
போக்குவரத்து விதிமீறல் அபராதம்
சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் பல்வேறு போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டு அது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவது, தலைக்கவசம் அணியாமல் இருப்பது, சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது நிற்காமல் செல்வது போன்ற பல்வேறு விதிமீறல்களுக்காக அபாரதங்கள் விதிக்கப்பட்டு, அபராதச் சீட்டு(e challan) வழங்கப்படுகிறது.
உடனடியாக அபராதத் தொகை செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், பலரும் இதனை செலுத்துவதில்லை.
நிலுவையில் உள்ள அபராதங்கள்
2025 ஆம் ஆண்டு தொடக்கம் வரை, நாடு முழுவதும் ரூ.40,548 கோடி மதிப்புள்ள 31.10 கோடி இ-சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ரூ.16,324 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டு, ரூ.24,224 கோடி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
தமிழ்நாட்டில், ரூ.3,875 கோடி மதிப்பிலான 6.90 கோடி இ-சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் ரூ.1,025 கோடி மதிப்பிலான இ-சலான்களுக்கான அபராதங்கள் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளன.
ஓட்டுநர் உரிமம் ரத்து
இந்நிலையில், 3 மாதங்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் வகையிலான விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளது.
அதேபோல ஒரு நிதியாண்டில் 3 இ-சலான்கள் வழங்கப்பட்டால், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். மேலும், முந்தைய நிதியாண்டில் 2 இ-சலான் வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை செலுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
புதிய விதிமுறைப்படி, சாலை விதிகளை மீறுவோருக்கு 3 நாள்களில் இ-சலான் அனுப்பப்படும். இ-சலானில் ஏதேனும் தவறு இருக்கும்பட்சத்தில் 30 நாள்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும், இல்லையெனில் அபராதத்தை ஏற்றுக்கொண்டதாக கருதப்படும்.
90 நாள்களுக்குள் அபராதம் செலுத்தவில்லை என்றால், ஓட்டுநர் உரிமம் அல்லது ஆர்சி சான்றிதழ் ரத்து செய்யப்படும்.
தவறான இ-சலான் வருவது, தாமதமாக இ-சலான் வருவது போன்ற காரணங்களால் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்துவதில்லை என கூறப்படும் நிலையில், இதனை சரி செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |