விண்வெளியில் Traffic jam.., செயற்கைக்கோள் நெரிசல் அதிகரிப்பால் விஞ்ஞானிகள் கவலை
செயற்கைக்கோள்களின் நெரிசல் அதிகரித்து வருவதால் பூமியின் சுற்றுப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விண்வெளியில் போக்குவரத்து நெரிசல்
குறைந்த புவி சுற்றுப்பாதை (LEO) என்பது பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகில் செயற்கைக்கோள்கள் சுற்றும் விண்வெளியின் பகுதி ஆகும். இந்த குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) அதிகரித்து வரும் நெரிசல் எதிர்கால விண்வெளி நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
ஏனெனில் சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமல், இந்த பகுதி விரைவில் பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது,14,000 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன. அவற்றில் சுமார் 3,500 செயலற்றவையாக உள்ளது.
மேலும், கடந்தகால ஏவுதல்கள் மற்றும் மோதல்களில் இருந்து 120 மில்லியன் குப்பைகள் சுற்றுப்பாதையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் விண்வெளிப் போக்குவரத்து ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் குழு, சுற்றுப்பாதை பொருள்களின் விரிவான பகிரப்பட்ட தரவுத்தளத்தின் அவசரத் தேவையை வலியுறுத்தியது.
உலகளாவிய தொடர்பு, அறிவியல் ஆய்வு ஆகியவற்றிற்கு LEO -ன் பாதுகாப்பு முக்கியமானது. இருந்தாலும், குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) உள்ள பொருட்களைக் கண்காணிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பை நிறுவுவது சவாலாக உள்ளது.
ஏனென்றால், சில நாடுகள் தரவைப் பகிரத் தயாராக இருந்தாலும், மற்ற நாடுகள் சிவிலியன் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக தயங்குகின்றன.
அதேபோல, வணிக நிறுவனங்களும் தனியுரிம தகவலைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றன. இதனால், குழப்பமான சூழல் நிலவுகிறது.
சமீபத்திய சம்பவங்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) அதிகரித்து வரும் அபாயங்களை காட்டுகின்றன. உதாரணமாக, ஆகஸ்ட் மாதம் சீன ராக்கெட் வெடித்து, சுற்றுப்பாதை முழுவதும் குப்பைகளை சிதறடித்தது.
இதேபோல, ஜூன் மாதம் செயலிழந்த ரஷ்ய செயற்கைக்கோள் வெடித்ததால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி வீரர்கள் ஒரு மணி நேரம் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும், SpaceX போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதன் மூலம் மோதல்கள் அதிகரிப்பதற்கான சூழல் நிலவுகிறது.
வரும் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் நுழையக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல்களால் ஐந்து ஆண்டுகளில் 556 மில்லியன் டொலர் நிதி அபாயத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், விமானப் போக்குவரத்து நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும் விதிமுறைகளை போன்று உருவாக்க வேண்டும் என்று தொழில்துறை தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், LEO -யில் மனிதர்கள் அதிகரித்து வருவதால், விண்வெளி நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |