திருப்பதி கோயிலில் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயங்கி விழுந்த புதுமணப்பெண்
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த லட்சுமி சாய் சந்தோஷ் (21) என்பவருக்கும், ஐதராபாத்தை சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23 -ம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தம்பதிகள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கடந்த 27 -ம் திகதி சென்றனர். அப்போது, நேற்று மாலை கூட்டம் அலைமோதிய போதிலும் வரிசையில் நின்று தரிசிக்க சென்றனர்.
கடைசியில், ஏழுமலையானை தரிசித்து விட்டு மண்டபம் அருகே புதுமணப் பெண் நடந்து வந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.
மரணம்
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு புதுமணப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் எனக் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து லட்சுமி சாய் சந்தோஷின் பெற்றோர் கூறுகையில், "சிறு வயது முதலே லட்சுமி சாய் சந்தோஷ்க்கு சுவாசக் கோளாறு இருந்ததாகவும், கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு வந்ததால் மயங்கி விழுந்து இறந்ததாகவும்" கூறியுள்ளனர்.
இதனிடையே, புதுமணப்பெண் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதாக அவரது பெற்றோர்கள் பொலிஸில் புகார் அளித்ததால், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |