திருமதி இலங்கை பட்டம் வென்றவருக்கு மேடையில் நடந்த துயரம்: மன்னிப்பு கோரிய அமைப்பாளர்கள்
திருமதி இலங்கை பட்டம் வென்றவருக்கு எதிராக மேடையிலேயே சண்டை மூண்ட நிலையில், காயம் காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை நாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021ம் ஆண்டுக்கான திருமதி இலங்கை பட்டத்தை ஞாயிறன்று நடந்த விழாவில் புஷ்பிகா டி சில்வா தட்டிச் சென்றார்.
ஆனால் சில நிமிடங்களில் குறித்த பட்டத்தை புஷ்பிகா பெற தகுதியற்றவர் என்ற வாதத்துடன் முன்வந்தார் 2019-ல் திருமதி இலங்கை பட்டம் வென்ற கரோலின் ஜூரி என்பவர்.
மட்டுமின்றி, புஷ்பிகாவிடம் இருந்து பட்டத்தை அவர் பறித்துக் கொண்டார். புஷ்பிகா விவாகரத்து பெற்றுக்கொண்டவர் என்பதால் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன்வைத்தார்.
மட்டுமின்றி, புஷ்பிகாவிடம் இருந்து பறித்த திருமதி இலங்கை பட்டத்தை, இரண்டாவது இடம் பிடித்தவருக்கு வழங்கப்பட்டது.
இச்சம்பவங்களால் மனமுடைந்த புஷ்பிகா கண்ணீருடன் மேடையை விட்டு வெளியேறினார். ஆனால் விசாரணையில் புஷ்பிகா விவாகரத்து பெற்றவரல்ல எனவும், கணவன் மனைவி இருவரும் பிரிந்திருப்பது உண்மை தான் எனவும் கண்டறிந்ததை அடுத்து, அமைப்பாளர்கள் புஷ்பிகாவிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். இதனிடையே, உலக மக்கள் முன்னிலையில் தம்மை அவமானப்படுத்தியதாக கூறி, கரோலின் ஜூரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக புஷ்பிகா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புஷ்பிகா தொடர்பில் உண்மை வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, அவருக்கு திருமதி இலங்கை பட்டம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.
மேடையில் நடந்த சச்சரவால் தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து புஷ்பிகா மருத்துவ சிகிச்சையை நாடியதாக அவரே தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.