இலங்கையிலிருந்து கனடா வந்து கர்ப்பமுற்றிருக்கும்போது துன்புறுத்தப்பட்டு... தனி ஆளாகப் போராடிய பெண்ணின் துயர முடிவு
புது வாழ்வு வரும் என்று நம்பி கணவனுடன் கனடா வந்த இளம்பெண் ஒருவர், கணவனால் துன்புறுத்தப்பட்டதுடன், பெண்களை வெறுக்கும் ஒருவரால் உயிரிழந்த பரிதாபக் கதை இது.
2010ஆம் ஆண்டு, பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்ட திருமணத்தைத் தொடர்ந்து, கணவருடன் கனடா வந்தடைந்தார் ரேணுகா அமரசிங்க (45).
ஆனால், கனவுகளுடன் வந்த வாழ்க்கை மலர்ப் படுக்கையாக இல்லை. சீக்கிரமே பொலிஸ் நிலையத்தை நாடிச் செல்லவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது ரேணுகாவுக்கு...
ஆம், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த ரேணுகாவை, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கணவர் துன்புறுத்துவதாக அவர் புகாரளிக்க, அவரது கணவரை கைது செய்துள்ளார் லாரா (Laura Middleton) என்ற பெண் பொலிஸ் அதிகாரி.
அப்போதிருந்தே, தனிமையில் விடப்பட்ட ரேணுகாவுக்கு பல உதவிகள் செய்துள்ளார் லாரா. ரேணுகா தன் கணவரை விவாகரத்து செய்ய, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரேணுகாவின் மகன் Diyon பிறந்திருக்கிறான்.
தனி ஆளாக மகனையும் வளர்த்தபடி, தானும் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார் ரேணுகா. பின்னர் Toronto District School Boardஇல் ஒரு வேலையும் கிடைத்திருக்கிறது ரேணுகாவுக்கு.
ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தில், தனக்கு பிரச்சினை ஏற்பட்டபோது உதவிய பொலிஸ் நிலையத்துக்கு தன் மகனுடன் சென்று, தனக்கு உதவிய பொலிசாருக்கு நன்றி கூறுவது ரேணுகாவின் வழக்கமாம்.
ஒரு ஆணால் துன்புறுத்தப்பட்டு, தனி ஆளாக போராடி தன் மகனை வளர்த்து தானும் சொந்தக் காலில் நின்று வாழ்ந்துவந்த ரேணுகாவின் வாழ்வில் எமனாக வந்திருக்கிறார் மற்றொரு ஆண்.
ஆம், தனக்குப் பழக பெண் கிடைக்காத வெறுப்பில், வேன் ஒன்றைக் கொண்டு பாதசாரிகள் மீது மோதியிருக்கிறார் அலெக் மின்னேசியன் என்னும் ஒருவர்.
அந்த வேன் மோதியதில் 10 பேர் கொல்லப்பட, 16 பேர் படுகாயமடைந்தார்கள். அந்த விபத்தில் பலியான பெண்களில் ரேணுகாவும் ஒருவர்.
தன் மகனை வளர்த்து ஆளாக்கவேண்டும் என்ற கனவில் தனி ஆளாகப் போராடிய ரேணுகா, அவனைத் தனியே விட்டு விட்டுப் போய்விட்டார். பாவம், அந்தப் பிள்ளை!